‘துள்ளுவதோ இளமை’ அபிநய் குறித்து வெளியாகும் பல்வேறு தகவல்கள் அவரது வாழ்க்கை எத்தகைய கொடும் அனுபவங்களை அவருக்குத் தந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அபிநய்யுடன் இணைந்து ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி. அதன் படப்பிடிப்பு டெல்லியில் நடந்தபோது இடம்பெற்ற நிகழ்வுகளை விஜயலட்சுமி பகிர்ந்துள்ளார்.
“அது ‘சென்னை 28’ திரைப்படம் வெளியான நேரம். தனியார் தொலைக்காட்சி விளம்பரத்தில் அபிநய்யுடன் இணைந்து நடித்தேன். அப்போது அவர் விளம்பர உலகில் முதல் இடத்தில் இருந்தார். டெல்லியில் நானும் அவரும் ஒரே அறையில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
“எனக்கோ அப்போதெல்லாம் அறிமுகம் இல்லாதவர்களைப் பார்த்தால் பயம், தனியாகச் செல்வதில் தயக்கம், கூச்ச சுபாவம் என்று பல பிரச்சினைகள்.
“நானும் அபிநய்யும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கினோம். இன்னோர் ஆணுடன் தனியாகத் தங்குவதை என் காதலர் உட்பட யாரிடமும் சொல்லவில்லை. பதற்றத்துடன் நானே நிலைமையைக் கையாண்டேன்.
“ஆனால், அபிநய் மிகப் பண்பான, கண்ணியமான மனிதர். தொழில் ஒழுக்கம்கொண்டவர்,” என்று பாராட்டியுள்ளார் விஜயலட்சுமி.
தினமும் படப்பிடிப்பு முடிந்து திரும்பியதும், தங்கியுள்ள இடத்தில் இருந்த ஒரே அறைக்குள் இவர் சென்று கதவைத் தாழ்போட்டு தூங்குவாராம். ஆனால், அபிநய் வெளியே உள்ள இடத்தில் தனியாக அமர்ந்து மது அருந்துவாராம்.
“அவ்வப்போது அவர் அங்குதான் இருக்கிறாரா என கதவைத் திறந்து பார்க்கும்போதெல்லாம் அமைதியாக மதுவை அருந்தி, ஒரு முழு பாட்டிலையும் முடித்து, தன்னை மறந்து கிடப்பார்.
தொடர்புடைய செய்திகள்
“அப்படி ஓர் இரவுப்பொழுதில், ‘ஏன் இப்படி குடிக்கிறீர்கள்’ என்று கேட்டபோது, தன் தனிப்பட்ட வாழ்க்கை, கடமைகள், தன் தாயார், மன அழுத்தங்கள், வலிகள், தனிமை குறித்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினார்.
“அவர் இதயத்திலிருந்து எல்லாம் வெளியேறட்டும் என நான் எதுவும் சொல்லாமல் கவனமாக முழுமையாகக் கேட்டேன்.
“படப்பிடிப்பு முடிந்து விமான நிலையத்திலிருந்து விடைபெறும்போது, அபிநய் என்னிடம், ‘நன்றி விஜி. இதற்கு முன் யாரும் என் வலிகள் குறித்து இவ்வளவு கேட்டதில்லை’ என்றார்.
“அவரை அரவணைத்து வழியனுப்பினேன். அதுவே, எங்களுடைய கடைசி சந்திப்பு,” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார் விஜயலட்சுமி.

