நடிகர் அஜித் குமார், குடும்பத்தினருடன் புத்தாண்டுக்காக சிங்கப்பூர் வந்துள்ளார்.
2024 டிசம்பர் 31ஆம் தேதி சென்னையிலிருந்து நள்ளிரவு 12.16 மணிக்குப் புறப்பட்டு, அதிகாலை 6.51 மணிக்கு அவர் SQ529 விமானத்தில் சாங்கி விமான நிலையம் முனையம் 1ல் வந்திறங்கினார்.
அவர், பயணப்பைகளைப் பெற்றுக்கொள்ளும் இடத்திலிருந்து மனைவி ஷாலினி, மகன், மகள், நடிகர் ரிச்சர்ட் ரிஷி ஆகியோருடன் வெளியேறும் காணொளியை உள்ளூர் கலைஞர் நகுலன் தினகரன் ஃபேஸ்புக்கில் பதிவேற்றினார்.
அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகூட அஜித் குடும்பத்தாரைக் கண்டு வியப்பில் புகைப்படம் எடுத்துக்கொள்வது அக்காணொளியில் தெரிகிறது.
“நடிகர் அஜித் மிகவும் தன்னடக்கமானவர். நான் கேட்டதும் உடனே புகைப்படம் எடுத்துக்கொள்வதற்குச் சம்மதித்தார்,” என்றார் திரு நகுலன். அதனால் தாம் அடைந்த மனநிறைவைப் பற்றியும் திரு நகுலன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார்.
புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக மரினா பேவுக்குச் சென்ற அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ‘எஸ்ஜி கஃபே’, ‘மூவீஸ் சிங்கப்பூர்’ போன்ற அமைப்புகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளன. இங்குள்ள ஓர் உணவங்காடி நிலையத்தில் அஜித் உணவு சாப்பிடுவதைக் காட்டும் காணொளியும் பரவி வருகிறது.
“நடிகர் அஜித்தின் சிங்கப்பூர் பயண ஏற்பாடுகளை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி பார்த்துக்கொள்கிறார். அவர்கள் ஒரு வாரத்திற்கு சிங்கப்பூரில் தங்கவுள்ளதாகக் கேள்விப்பட்டேன். குடும்பப் பயணமாக இங்கு வந்துள்ளதால் அவர்களை நாங்கள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை,” என்றார் ‘மூவீஸ் சிங்கப்பூர்’ நிறுவனர் ஐயப்பா குமார்.
இதற்கு மத்தியில், பொங்கலுக்காக அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தைக் காண ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக, அப்பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.