நடிகர் அஜித்தின் தாயார் காலமானார்

நடிகர் அஜித்தின் தாயார் காலமானார்

2 mins read
4a73838f-b213-4605-b5a0-801b0b5fe1a8
பெற்றோருடன் அஜித். - படம்: எக்ஸ்/நியூஸ் 18

நடிகர் அஜித்தின் தாயார் வயதுமூப்பு காரணமாகக் காலமானார்.

இதையடுத்து, துபாய் சென்றிருந்த அஜித், உடனடியாக சென்னைக்கு விரைந்துள்ளார்.

அஜித்தின் தாயார் மோகினி மணி, கோல்கத்தாவைச் சேர்ந்தவர். சிந்தி சமூகத்தில் பிறந்த அவர்மீது அஜித் மிகுந்த பாசம் கொண்டிருந்தார்.

அண்மைக் காலமாக முதுமை தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் மோகினி மணி. இதன் காரணமாக, தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டு அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் காலமான நிலையில், மகன் அஜித்துடன் வசித்துவந்தார் மோகினி மணி.

சுப்பிரமணியம் தம்பதியர்க்கு மூன்று மகன்கள் உள்ளனர். சென்னை பாலவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார் அஜித். அவரது வீட்டில் திருவாட்டி மோகினியின் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

அவரது மறைவுக்குத் திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை (மே 31) காலை 8.30 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் அதில் அஜித்தின் நெருக்கமான உறவினர்கள் நண்பர்கள் மட்டும் கலந்துகொள்வார்்கள் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் அஜித்தின் மிக நெருக்கமான நண்பர்களில் ஒருவரான தமிழக முதல்வர் விஜய் தொலைபேசி மூலம் அவரிடம் தனது இரங்கலைத் தெரிவித்ததாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறின.

அஜித் முன்னணி நடிகராக வளர்ந்த பிறகு செய்தியாளர்களை ஆண்டுக்கு ஒருமுறை சந்தித்தால் அதுவே பெரிது என்ற நிலை இருந்தது. எனினும், அந்தச் சந்திப்பின்போது அவரது குடும்பத்தாரும் உடனிருப்பர். குறிப்பாக, அஜித்தின் பெற்றோர் செய்தியாளர் சந்திப்பு முடியும் வரை காத்திருப்பார்கள்.

இருவரையும் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு உணவு, பழரசம் எனச் சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய்த பிறகு அஜித் செய்தியாளர்களிடம் உரையாடுவார்.

குறிப்புச் சொற்கள்
அஜித்தாய்உயிரிழப்பு