திரையுலகில் ‘ஆக்ஷன் கிங்’ என்று புகழப்படும் நடிகர் அர்ஜுன், நடிப்பது மட்டுமின்றி ‘ஜெய்ஹிந்த்’, ‘தாயின் மணிக் கொடி’, ‘வேதம்’ உள்ளிட்ட பன்னிரண்டு திரைப்படங்களை இயக்கித் திறமையான இயக்குநராகவும் முத்திரை பதித்தவர். அந்த வரிசையில் அவர் தற்போது ‘சீதா பயணம்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடித்துள்ளார். அவருக்கு இணையாக கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும், இப்படத்தில் மூத்த நடிகர்களான சத்யராஜ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் கதையின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அர்ஜுனின் ‘ஸ்ரீராம் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.
காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் முன்னோட்டக் காட்சி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படம் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டுத் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

