தமிழ்த் திரையுலகின் பிரபல, முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் சர்ஜா, “தனக்கு அளிக்கப்பட்டுள்ள கௌரவ டாக்டர் பட்டத்தால் தனது பொறுப்புகள் கூடியுள்ளன,” எனத் தெரிவித்துள்ளார்.
திரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் அர்ஜுனுக்கு, சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இதேபோன்று, ‘சின்னதம்பி’, ‘மன்னன்’, ‘சந்திரமுகி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பி.வாசுவுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
அதன்பின்னர் பேசிய அர்ஜுன், தனக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளதால் பொறுப்புகள் கூடியுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தக் கௌரவத்தை நியாயப்படுத்தும் விதத்தில் நல்ல மனிதனாக இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ‘ஜென்டில்மேன்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘கர்ணா’, ‘முதல்வன்’ உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. இதுவரை 12 படங்களையும் இயக்கியுள்ள அர்ஜுன், தனது திரையுலக வாழ்க்கையையும் தாண்டி ஆன்மீகம், சமூகச் சேவைகளிலும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

