பழம்பெரும் குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்.
80 வயதான அவர், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனது வீட்டில் சனிக்கிழமை இரவு காலமானதாக குடும்பத்தார் தெரிவித்தனர்.
கே.பாலச்சந்தர் இயக்கிய ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான டெல்லி கணேஷ், தொடக்கக் காலத்தில் இந்திய விமானப் படையில் பணியாற்றியவர்.
எனினும், நடிப்பின் மீதான ஆர்வத்தால் அப்பணியைத் துறந்து நாடகங்களிலும் பின்னர் திரைப்படங்களிலும் நடித்தார்.
ஏராளமான படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர, வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் டெல்லி கணேஷ்.
மேலும், பல குறும்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து முத்திரை பதித்தவர் அவர்.
அண்மைக் காலமாக முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் ஓய்வெடுத்து வந்தார் டெல்லி கணேஷ். சனிக்கிழமையன்று (நவம்பர் 9ஆம் தேதி) அவர் காலமானார்.
அவரது மறைவுக்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். திரையுலகத்தினரும் ரசிகர்களும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
திருநெல்வேலிக்கு அருகில் உள்ள வல்லநாடுதான் டெல்லி கணேஷின் சொந்த ஊராகும்.
‘டெளரி கல்யாணம்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘புன்னகை மன்னன்’, ‘சிந்து பைரவி’, ‘உன்னால் முடியும் தம்பி’ என பல வெற்றிப் படங்களில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
கமலின் படங்களில் டெல்லி கணேஷுக்கு ஏதேனும் ஒரு வேடம் நிச்சயம் இருக்கும். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நாகேஷுக்கு அடுத்தபடியாக, இவரும் வில்லனாக நடித்திருந்தார்.
‘அவ்வை சண்முகி’ உள்ளிட்ட பல படங்களில் டெல்லி கணேஷின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.