உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும் வில்வித்தை பயிற்றுவிப்பாளருமான ஷிஹான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவருக்கு வயது 60. ரத்த புற்றுநோய் பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.
மதுரையைச் சேர்ந்த ஹுசைனி, பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் கே.பாலச்சந்தரின் ‘புன்னகை மன்னன்’ படத்தில் அறிமுகமானார்.
அதன் பின்னர் நடிகர் விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தில் முக்கியப் பாத்திரத்தில் ஹுசைனி நடித்தார். அதைத்தொடர்ந்து பலருக்கும் வில்வித்தை பயிற்சியும் அவர் அளித்தார்.
அண்மையில் ரத்த புற்றுநோய் பாதிப்பால் தன் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக ஊடகங்களின் வாயிலாக ஹுசைனி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரது மருத்துவச் சிகிச்சைக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
இந்த சூழலில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். தனது உடலை தானம் செய்வதாக சில நாள்களுக்கும் முன்னர் ஹுசைனி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹுசைனியின் மறைவுக்குக் கராத்தே மற்றும் வில்வித்தை விளையாட்டு வீரர்கள், திரை உலகினர் இரங்கல் தெரிவித்தனர்.