புகழ்பெற்ற நடிகர் மம்முட்டிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது கேரளாவில் உள்ள கல்லூரி ஒன்று.
எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரி, வரலாற்றுத் துறையில் இளநிலைப் பட்டக் கல்விக்கான பாடத்திட்டத்தில் ‘மலையாள சினிமாவின் வரலாறு’ என்ற தலைப்பிலான பாடம் இணைக்கப்பட்டுள்ளது.
திரைப்படத் துறைக்குக் கடந்த 50 ஆண்டுகளில் சிறப்பாகப் பங்களித்த மம்முட்டியின் கலைப்பயணத்தை விவரிக்கிறது அந்தப் பாடம்.
மலையாள திரைத்துறையில் கோலோச்சும் நடிகர்களில் ஒருவரான மம்முட்டிக்கு வயது 73. இளம் கதாநாயகர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நடிப்பவர் என்று ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளவர்.
வரலாற்றுப் பாடத்திட்டத்தில் அவரைப் பற்றிய பாடம் இணைக்கப்பட்டிருப்பது மம்முட்டிக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமை என்று கொண்டாடுகின்றனர் ரசிகர்கள்.
சமூக வலைத்தளங்களில் நடிகர் மம்முட்டிக்குப் பலரும் வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

