கலைவாணரைச் சாய்த்த அந்த வார்த்தை

கலைவாணரைச் சாய்த்த அந்த வார்த்தை

3 mins read
ae5b0bd8-4449-4c1a-8891-2cc225e33069
‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் என்.எஸ். கிருஷ்ணன். - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகில் இன்றுவரை ஈடிணையற்ற கலைஞராகப் போற்றப்படுபவர் மறைந்த என் எஸ் கிருஷ்ணன். அவரை அனைவரும் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் என்றே அழைப்பர். அந்தக் கலைஞர் திரையுலகக் கதாசிரியர் மட்டுமல்ல, பாடகர், நகைச்சுவை நடிகர் எனப் பல திறன் படைத்த அற்புத மனிதர். இதற்கும் மேலாக தமது பாடல்களாலும் நகைச்சுவைக் காட்சிகளாலும் மக்கள் மத்தியில் புரட்சிக் கருத்துகளை விதைத்தவர்.

ஆனால், இந்தக் கலைஞரின் இறுதிக் காலம் சோகம் நிறைந்தது. அவருடைய வீழ்ச்சிக்கு தெரிந்தோ தெரியாமலோ அவரே காரணம் என்றும் கூறலாம். தமிழ்த் திரையுலகில் 1940களிலும் 50களிலும் மிகப் பிரபலமான நகைச்சுவைக் கலைஞரான இவர் முதலில் ஒரு கொலைக் குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டார்.

நடிகர், நடிகைகள், பிரபல கலைஞர்கள் பற்றி தனது சினிமா தூது, பின்னர் இந்து நேசன் போன்ற பத்திரிகைகளில் அவதூறு செய்தி பரப்பி வந்த லட்சுமிகாந்தன் என்ற செய்தியாளர் சென்னை வேப்பேரி பகுதியில் 1944ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இதில் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அன்றைய மற்றொரு புகழ்பெற்ற பாடகரும் நடிகருமான எம் கே தியாகராஜ பாகவதர், படத் தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.

வழக்கு விசாரணையில் ஸ்ரீராமுலு நாயுடு குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் கலைவாணர், பாகவதர் மீதான குற்றச்சாட்டு உறுதியாகி, அவ்விருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் சென்னை உயர் நீதிமன்றமும் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்ய இருவரும் பிரிட்டனின் ஆக உயரிய மேல்முறையீட்டு நீதிமன்றமான ‘பிரிவி கவுன்சிலில்’ மேல்முறையீடு செய்தனர்.

அங்கு முக்கியக் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அரசுத் தரப்புச் சாட்சியாக மாறினார். கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர் மீதான குற்றச்சாட்டில் இவர்தான் முக்கிய சாட்சியாக விளங்கியதாலும் இது தவிர தன்னிச்சையான சாட்சியம் ஏதும் இல்லாத நிலையில் இருவரையும் பிரிவி கவுன்சில் விடுதலை செய்தது.

அதற்குள் கலைவாணரும் பாகவதரும் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுச் சிறைவாசம் அனுபவித்துவிட்டனர்.

அதன் பின்னர் பாகவதர் சில படங்களில் நடித்தாலும் அவரால் பழைய நிலையை அடைய முடியாமல் வறுமையில் உழன்று 1959ல் மரணமடைந்தார். ஆனால், கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் விடுதலையான பின்னரும் படங்களில் நடித்து ஓரளவு பெயர் வாங்கினார். அவரது பட வாழ்க்கை முடிவுக்கு வர பிள்ளையார் சுழி போட்டது அவரது வாயிலிருந்து வந்த வார்த்தைகள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், ஒருமுறை சக நகைச்சுவை நடிகர் தங்கவேலு தான் வறுமையில் இருப்பதைக் கூறி கலைவாணரிடம் பண உதவி கேட்டார். கலைவாணரும் சற்றும் யோசிக்காது தனது சட்டைப் பையில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளார். ஆனால் கொடுக்கும்போது, என்னிடமுள்ள லட்சுமியை உனக்குத் தருகிறேன் என்று சொல்லிக் கொடுத்தார். அவர் கூறிய அந்த வார்த்தைகள் அவரது திரையுலக வாழ்க்கையைப் படிப்படியாக ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது என்பதுதான் துயரமான சம்பவம்.

அது மட்டுமல்ல, அவரது இறுதிக் காலத்தில் குடிப்பழக்கம் ஏற்பட்டு அதன் பாதிப்பால் இறந்தார். அவரது பழக்கத்திற்கு நேர்மாறாக அவர் நடித்த நல்ல தம்பி திரைப்படத்தில் கள்ளுக்குப் பதிலாக மக்கள், பால், டீ, மோர், நீராகாரம் ஆகியவற்றைக் குடித்து பழக வேண்டும் என்று தனது, “குடித்துப் பழகணும் குடித்துப் பழகணும்...” என்ற பாடல் வரிகள் மூலம் அறிவுறுத்தினார்.

கலைவாணரிடமிருந்து உதவி பெற்ற நாளிலிருந்து நடிகர் தங்கவேலின் சினிமா புகழ் உயர ஆரம்பித்தது. அதே வேளையில் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனின் சினிமா வாழ்க்கை வீழ்ச்சி காணத் தொடங்கியது. இறுதியில் கலைவாணரும் வறுமையில் வாடி தமது 48வது வயதில் 1957ல் மரணமடைந்தார்.

குறிப்புச் சொற்கள்