நாயகனாக அறிமுகமாகும் நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ்

2 mins read
46a2fa6e-13a8-4e84-9f36-4da5ff06da98
‘உருட்டு உருட்டு’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

காலஞ்சென்ற நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

தாம் இயக்கும் ‘உருட்டு உருட்டு’ படத்தின் மூலம் கஜேஷை அறிமுகம் செய்கிறார் இயக்குநர் பாஸ்கர் சதாசிவம்.

இதில் ரித்விகா ஸ்ரேயா நாயகியாக நடித்துள்ளார். மேலும், ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பாடல்களுக்கான இசையை அருணகிரியும் பின்னணி இசையை கார்த்திக் கிருஷ்ணனும் வழங்கி உள்ளனர். பாஸ்கர் சதாசிவம் ஒளிப்பதிவையும் கவனித்துள்ளார்.

இன்றைய சமூகம் எதிர்கொண்டுள்ள முக்கியப் பிரச்சினையை அலசும் வகையில் இப்படத்தின் கதை, திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம். உடனே... சீரியஸான படமாக இருக்கும் என நினைத்துவிட வேண்டாம்.

“ஏறக்குறைய 25, 30 ஆண்டுகளுக்கு முன்பு, அரசு மருத்துவமனைகள், பொது இடங்களில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற விளம்பரம் பிரபலமாக இருந்தது. பிறகு, ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்று அது மாறியது.

“தற்போது ‘குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா? எங்கள் மருத்துவமனைக்கு வாங்க’ எனப் பல இடங்களிலும் கருத்தரிப்பு மையங்களை மட்டுமே காண முடிகிறது. இதற்கு என்ன காரணம் என்பதை நகைச்சுவை கலந்து சொல்கிறோம்,” என்கிறார் இயக்குநர் பாஸ்கர் சதாசிவம்.

பழம்பெரும் நடிகர் நாகேஷ் தமிழ் சினிமா உலகின் ஆகச்சிறந்த நகைச்சுவைக் கலைஞர்களில் ஒருவர். ஏராளமான வெற்றிப் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர்.

தொடர்புடைய செய்திகள்

நாகேஷ் நாயகனாக நடித்த பல படங்கள் வெற்றி பெற்றன. அவரது மகன் ஆனந்த் பாபு சில படங்களில் நடித்திருந்தாலும் தந்தையின் உயரத்தை எட்ட முடியவில்லை. இப்போது நாகேஷின் பேரன் களமிறங்கி உள்ளார்.

“அதிலும் தாத்தாவைப் போல் பேரனும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் அறிமுகமாவது சிறப்பு. ‘உருட்டு உருட்டு’ படம் விரைவில் திரைகாண உள்ளது. படம் நிச்சயம் வெற்றி பெறும்,” என உறுதியாகச் சொல்கின்றனர் இப்படக் குழுவினர்.

குறிப்புச் சொற்கள்