தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

2 mins read
1abc49c4-087c-4f2c-9181-fa118627236f
விஜய்யுடன் ‘புலி’, அஜித்துடன் ‘விஸ்வாசம்’, தனுஷின் ‘மாரி’ உட்பட பல்வேறு படங்களில் ரோபோ சங்கர் நடித்துள்ளார். - படம்: இணையம்

சென்னை: தமிழ்த் திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் வியாழக்கிழமை (செப்டம்பர் 18) இரவு காலமானார். அவருக்கு வயது 46.

சென்னையில் புதன்கிழமை படப்பிடிப்பில் இருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நீர்சத்துக் குறைவு, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ரோபோ சங்கர் சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், மதுப்பழக்கத்திலிருந்து தாம் முழுமையாக மீண்டுவிட்டதாக நெருக்கமானவர்களிடம் கூறி வந்தார்.

புதன்கிழமை மாலை அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினர். ரோபோ சங்கர் மஞ்சள் காமாலையால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்குக் கல்லீரல், சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், உடலுறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழந்ததைத் தொடர்ந்து, வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9.08 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரோபோ சங்கரின் மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதிலிலேயே அவர் மறைந்தது குடும்பத்தாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரோபோ சங்கரின் உடல் வியாழக்கிழமை இரவு அவரது வீட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரோபோ சங்கர், பொருளியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். சிறந்த நகைச்சுவையாளராக வலம்வந்த அவர், நல்ல நடனக் கலைஞருமாவார். நிகழ்ச்சிகளில் ரோபோபோல் வேடமிட்டு நடனமாடியதால், ‘ரோபோ’ சங்கர் என அவர் பெயர் பெற்றார்.

தனியார் தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சியில் பலகுரல் கலைஞராக அறிமுகமாகி, பிரபலமாக அறியப்பட்ட ரோபோ சங்கர், 2007ல் ரவி மோகன் நடிப்பில் வெளியான ‘தீபாவளி’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமானார்.

அதன்பின், வெள்ளித்திரையிலும் அவர் அசத்தினார். விஜய்யுடன் ‘புலி’, அஜித்துடன் ‘விஸ்வாசம்’, தனுஷின் ‘மாரி’ உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள அவர், கமல்ஹாசனின் தீவிர ரசிகராவார்.

ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா, ஒரு சின்னத்திரை நடிகை. மகள் இந்திரஜா, திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மனைவி, மகளுடன் ரோபோ சங்கர்.
மனைவி, மகளுடன் ரோபோ சங்கர். - கோப்புப் படம்: ஊடகம்

ரோபோ சங்கர் விரைவில் ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடிக்கவிருந்தார். அதற்கான பணிகள் நடந்துவந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார்.

அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திமறைவுநடிகர்