தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறந்த நடிகர்: சிவாஜியின் பதிலால் அசந்த சத்யராஜ்

3 mins read
c0422eea-aae6-4d33-8137-2f280d8f2ee5
பாகப்பிரிவினை படத்தில் சிவாஜி, எம் ஆர் ராதா, நம்பியார் தோன்றும் ஒரு காட்சி. - படம்: இந்திய ஊடகம்

நடிகர் திலகம் சிவாஜி தமது நடிப்பின் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தவர். சாதாரணக் கதையில்கூட தமது நடிப்பால் படத்தில் சிறந்து விளங்க முடியும் என்பதில் திடமாக இருந்தவர். அதில் பேரளவு உண்மையும் இருந்தது.

ஒரு படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் திலகம் அருகில் அமர்ந்திருந்த சத்யராஜ் அவரை வம்புக்கு இழுக்கும் வகையில், உங்கள் நடிப்புக்கு யார் முன்னோடி, யாரை நீங்கள் சிறந்த நடிகர் என்று கூறுவீர்கள் என்று கேட்டார். அதற்கு அவரைப் பார்த்த சிவாஜி, “ஏண்டா நான் யாரையாவது பார்த்து காப்பி அடிக்கிறேன்னு நினைக்கிறாயா,’ என்று எதிர்க்கேள்வி கேட்டார்.

சுதாரித்துக்கொண்ட சத்யராஜ், “இல்லை அண்ணே, உங்களுக்கு இன்ஸ்பிரேஷனா ஒருத்தர் இருந்திருப்பார் இல்லையா? அப்படி யாராவது இருக்காரா என்று கேட்டேன்,” என்று சமாளித்தார். அதைக் கேட்ட சிவாஜி, “என்னைப் பொறுத்தவரை சிறந்த நடிகர் எம் ஆர் ராதா என்றுதான் கூறுவேன்.” என்றார். அசந்துபோன சத்யராஜ் சற்றும் நம்பிக்கையில்லாமல், அப்படியா என்று வாயைப் பிளந்தார்.

அதற்கு சிவாஜி, “ஆமாண்டா உங்களுக்கு எல்லாம் இரட்டைக் குரலில் பேசும் எம் ஆர் ராதாவைப் பற்றித்தான் தெரியும். ஆனால், அவரது நாடக நடிப்பைப் பார்த்து வெள்ளைக்காரனே அசந்துபோவான்,” என்று சட்டெனக் கூறினார். ஆம் தமிழ்த் திரையுலகில், 1950, 1960களில் அவரைப் போன்ற அசாத்திய திறமையுள்ள நடிகரைப் பார்ப்பது அரிது. எம்ஜிஆரை, எம் ஆர் ராதா சுட்டதைத் தொடர்ந்து, வழக்கு, சிறைத்தண்டனை என்ற பிரச்சினை வரும்வரை எம் ஆர் ராதாவின் அபார நடிப்பை மிஞ்சுவதற்கு எவருமில்லை. அதற்கு ஒரு சான்றுதான் அவர் சிங்கப்பூர் சிங்காரம் என்ற பாத்திரத்தில் சிவாஜி அவர்களுடன் நடித்த பாகப்பிரிவினை படம். அதில் அவர் பேசி நடிக்கும் காட்சிகள் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும். ஓரிடத்தில் அவருடைய நாய் சாதாரண நாயல்ல என்று சொல்லிவிட்டு, அது சாப்பிடுவதைப் பற்றிக் கூறும்போது, “என் நாய் என்ன உன் நாய் மாதிரி கத்திரிக்காய், வெண்டைக்காய் சாப்பிடற நாய்னு நினைக்கிறியா, ‘ஃபாரின் டாக்ஃபுட்’ சாப்பிடற நாய்,” என்று ஒரு போடு போடுவார். அதைக் கேட்டு நமக்கெல்லாம் சிரிப்பு தாங்காது. அதேபோல் வேறொரு காட்சியில், “வெள்ளைக்காரன் ஆவியிலே கப்பல் விடறான், நீங்கள்ளாம் புட்டு சுடுறீங்க,” என்று கேலி பேசுவார். அந்தப் படம் மிகச் சிறப்பாக அமைந்ததற்கு எம் ஆர் ராதாவும் ஒரு காரணம்.

இது ஒருபுறம் இருக்க வேறொரு சமயம் படப்பிடிப்புத் தளத்தில் சிவாஜி உட்கார்ந்திருக்க அவர் ரஜினிகாந்த் நடித்த ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படம் பற்றி படக்குழுவில் உட்கார்ந்திருந்த நண்பர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் “ரஜினியின் நடிப்பு அப்படியொன்றும் பிரமாதமாக இல்லை,” என்றும் நீங்கள் நடித்திருந்தால் கலக்கியிருப்பீர்கள் என்று கூறினர். இதைக் கேட்ட சிவாஜி, “போங்கடா ஜால்ராக்களா, அந்தப் பையன் நன்றாக நடித்திருக்கிறான், அவனுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது,” என்று கூறி அவர்கள் வாயை அடைத்தார். சிவாஜி அவர்கள் எப்பொழுதுமே இளம் கலைஞர்கள் வளர்ச்சியில் பெருமிதம் கொள்வார். அவர் கூறியதுபோல் ரஜினியும் அபார நடிப்புத் திறன் உள்ளவர் என்பதை எவராலும் மறுக்க முடியாது. சிவாஜி, ரஜினிகாந்த் இருவரும் நடித்த நான் வாழ வைப்பேன் படத்தின் முதல் பாதி சற்று மந்தமாகவே இருக்கும். ஆனால், இடைவேளைக்குப் பின் ரஜினிகாந்த், “ஆகாயம் மேலே, பாதாளம் கீழே, ஆனந்தம் உலகம் நடுவினிலே...” என்று ஆர்ப்பாட்டமாக அறிமுகமாகும்போது படம் அதன்பின் களைகட்ட ஆரம்பிக்கும்.

சிவாஜி ரஜினிகாந்த் மீது வைத்திருக்கும் பாசம், மதிப்புபோல் ரஜினிக்கும் சிவாஜி மீது அபார பாசம் உண்டு. சிவாஜி நடிப்பின் பின்னாள்களில் புதிய கதாநாயகர்கள் சம்பளமாக வாங்கும் தொகையைப் பார்த்து சற்று ஏக்கப்படுவார். அவர் நடிப்பின் உச்சியில் இருந்தபோது அவருக்குக் கிடைத்த சம்பளம் இன்றைய நடிகர்கள் வாங்கும் சம்பளத்துடன் ஒப்பிட்டால் மிகவும் குறைவு. ஆனால், ரஜினிக்கு வேண்டியவர்கள் தயாரித்த ‘படையப்பா’ படத்தில் ரஜினிகாந்தின் சிபாரிசில் சிவாஜிக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக காசோலை ஒன்று தரப்பட்டது. தவறு நடந்துவிட்டதோ என்று பதறிய சிவாஜி, ரஜினியைக் கூப்பிட்டுக் கேட்டார். அதற்கு ரஜினி, அதெல்லாம் ஒன்றுமில்லை, உங்கள் நடிப்புக்கான சம்பளம் அது கூறினார். அதைக் கேட்ட சிவாஜி மகிழ்ந்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்