நடிகர் சதீஷ் மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 27ஆம் தேதி தொடங்குகிறது.
இப்படத்தை கேஎஸ் ரவிகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய குருசரவணன் இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே தனது குருநாதரை நடிக்க வைத்து ‘கூகல் குட்டப்பா’ படத்தை இயக்கியவர்.
தற்போது மூன்றாவது படத்தை சதீஷை வைத்து இயக்குகிறார். ’கான்ஜுரிங் கண்ணப்பன்’, ‘சட்டம் என் கையில்’ ஆகிய படங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் நாயகனாக அவதாரம் எடுத்துள்ளார் சதீஷ்.
இப்படத்தின் மூலம் பிரபல தெலுங்கு நடிகர் சாய் குமாரின் மகன் ஆதி சாய்குமார், தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். சதீஷும் இதில் அதிரடி ஆக்ஷன் நாயகனாக மாறுகிறாராம். அதே சமயம் அவரது வழக்கமான நகைச்சுவைக்கும் குறைவு இருக்காதாம்.
இப்படத்தின் நாயகியாக மலையாள நடிகை சரண்யா ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் சரவணன், சிங்கம் புலி, ப்ளாக் பாண்டி, தங்கதுரை உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

