திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜியின் அறிமுகம்

3 mins read
04badc90-00d9-46de-a735-dc96e0467667
‘பராசக்தி’ படத்தில்வ சிவாஜி. - காணொளிப் படம்: ஏபி இன்டர்நேஷனல் / யூடியூப்

தமிழ்த் திரையுலகில் தன்னிகரற்ற நடிகராக நடிகர் திலகம் என்ற சிறப்புப் பெயர் பெற்ற சிவாஜி கணேசனின் திரையுலக அறிமுகம் அவரே எதிர்பார்க்காத ஒன்றுதான்.

நாடக நடிகராக இருந்த சிவாஜி கணேசனை முதலில் ஜெமினி ஸ்டுடியோஸ் அதிபர் எஸ் எஸ் வாசனின் சந்திரலேகா படத்தில் நடிப்பதற்காக அவரை வாசனிடம் நடிகர் வி கோபாலகிருஷ்ணன் கூட்டிச் சென்றா​ர்.

சிவாஜியின் அலங்கோலத் தோற்றத்தைப் பார்த்த வாசன், “ நான் உன்னை நடிக்கக் கூப்பிட்டால் நீ வியர்வையில் அலங்கோலமாக இருக்கும் இவரைக் கூட்டி வந்திருக்கிறாயே,” என்று கூறி சிவாஜியை திருப்பி அனுப்பிவிட்டா​ர்.

பின்னர் திரைப்படத் தயாரிப்பாளர் நேஷனல் பிக்சர்ஸ் உரிமையாளர் பி ஏ பெருமாள் ஏ வி எம் பட நிறுவனத்தின் ஏ வி மெய்யப்ப செட்டியாருடன் கூட்டுச் சேர்ந்து தயாரிக்க இருந்த ‘பராசக்தி’ படத்திலும் முதலில் நடிகர், பாடகர் என்றிருந்த கே ஆர் ராமசாமியைத்தான் நடிக்க வைக்க இருந்தார்.

ஆனால், அறிஞர் அண்ணா அப்பொழுது மேடை நாடகங்களில் பெயர் பெற்​றுவந்த சிவாஜியின் பெயரை சிபாரிசு செய்​தார்.

ஆனால், சிவாஜியை படத்தில் கதையின் நாயகனாக நடிக்க வைக்க ஏ வி மெய்யப்ப செட்டியார் விரும்பவில்லை. அவருக்கு சிவாஜி தமது படத்தில் நடிப்பது சரியாக இருக்காது என்று தோன்றவே அவர் அதற்கு சம்மதிக்கவில்லை.

சிவாஜிக்கு வாய்ப்புக் கொடுப்பதில் சற்று அழுத்தமாகவே அறிஞர் அண்ணா இருந்ததால் என்ன செய்வது என்ற குழப்பமான நிலை தோன்றியது. அப்பொழுது ‘பராசக்தி’ படத்தின் இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சு இரட்டையர் திரு மெய்யப்ப செட்டியாருக்கு அவருடைய பங்குத் தொகையை கொடுத்துவிட்டு படத் தயாரிப்பிலிருந்து அவரை நீக்கிவிடலாம் என்று கூறினர். அதை ஏற்ற பி ஏ பெருமாள் படத் தயாரிப்பிலிருந்து மெய்யப்ப செட்டியாரை நீக்​கினார்.

அடுத்து சிவாஜியின் மெலிந்த தோற்றம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தது. அதற்கும் அறிஞர் அண்ணா ஒரு தீர்வு சொன்​னார். சிவாஜிக்கு ஒரு இரண்டு வாரங்கள் நல்ல சாப்பாடு போட்டு பார்த்துக் கொண்டால் அவருடைய மெலிந்த உடல் தோற்றத்தை சரிசெய்து விடலாம் என்று கூறினாராம்.

அதையும் சரிசெய்த பின்னர் ‘பராசக்தி’ படத்திற்கு முதலில் கதை, வசனம் எழுத தேர்வு செய்யப்பட்ட திருவாரூர் தாஸ் என்பவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படவே கலைஞர் கருணாநிதி அந்தப் பணியை செய்வது என்று முடிவானது.

இப்படி உருவான ‘பராசக்தி’ படம்தான் 1952ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்து சக்கைபோடு போட்டது. படத்தில் நடித்த சிவாஜி பேசும் வசனம் தமிழ்ப் படங்களில் அடுக்கு மொழி வசனத்தைப் போற்றிப் புகழும் காலத்துக்கு வழி வகுத்தது.

படத் தயாரிப்பாளர் பெருமாள், சிவாஜி, கலைஞர் கருணாநிதி என பலருக்கும் பராசக்தி படம்தான் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.

படத்தின் கதை, வசனத்தை எழுதிய கலைஞர் கருணாநிதி அதற்கு முன்னரும் படங்களில் வசனம் எழுதிப் பெயர் பெற்றிருந்தாலும் பராசக்தி படத்தில் அவருக்குக் கிடைத்த பெயரும் புகழும் சிவாஜி அதற்குக் கொடுத்த உயிரோட்டமும் கலைஞருக்கு அழியாப் புகழைத் தந்தன. அதைத் தொடர்ந்து கலைஞரின் வசன நடையில் மனோகரா, திரும்பிப்பார், குறவஞ்சி போன்ற படங்களிலும் சிவாஜியின் வசன உச்சரிப்பு, நடிப்பு யாவையும் மக்கள் மனத்தில் ஆழப் பதிந்தன.

குறிப்புச் சொற்கள்