மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ஸ்ரீ

2 mins read
d6baf787-f524-48a8-92bb-0a13373073f4
ஒருகாலத்தில் நம்பிக்கைக்குரிய நடிகராக இருந்த நடிகர் ஸ்ரீ தற்போது எலும்பும் தோலுமாக காணப்படுகிறார். - படங்கள்: தமிழக ஊடகம்

நடிகர் ஸ்ரீயை மருத்துவர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்து நல்ல நடிகர் எனப் பெயரெடுத்தவர் ஸ்ரீ.

ஆகக் கடைசியாக இவர் நடித்த இறுகப்பற்று திரைப்படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

அப்படத்தில் ஸ்ரீயின் நடிப்புக்குப் பாராட்டுகள் குவிந்தன.

அதன்பின், ஸ்ரீ நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. இன்றைய இளம் நடிகர்களில் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் தற்போது இன்ஸ்டகிராமில் மெலிந்த தோற்றத்துடன் காணப்படுகிறார்.

எலும்பும் தோலுமாக தாம் இருப்பதைக் காட்டும் புகைப்படங்களைப் பதிவேற்றியதுடன் ஆபாசமான காணொளியையும் வெளியிட்டார்.

இதைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஸ்ரீக்கு மனநல சிகிச்சை தேவை என்றும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்றும் இன்ஸ்டகிராமில் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்..

இந்நிலையில், நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை குறித்து அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

“நடிகர் ஸ்ரீக்கு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சமூக ஊடகங்களில் இருந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து வருகிறார் என்று நண்பர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

“அவர் குணமடைந்து மீண்டு வருவதில் கவனம் செலுத்துவதால், அவரது தனியுரிமையை அனைவரும் மதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஊகங்களும் தவறான தகவல்களும் மிகவும் வருத்தமளிக்கிறது.

“மேலும், அவரது உடல்நிலைப் பற்றிய வதந்திகள் மற்றும் உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.

“சிலரின் நேர்காணல்களில் தெரிவிக்கும் எந்தவொரு கருத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை, அதை முழுமையாக மறுக்கிறோம். இந்த நேரத்தில் உங்கள் தொடர்ச்சியான அன்பு, ஆதரவு மற்றும் புரிதலுக்கு நன்றி” என்று நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்