நடிகர் உதயா நடித்துள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக உள்ளது.
அப்படத்தின் அறிமுக விழாவில் பேசிய அவர், திரையுலகில் பல வெற்றி, தோல்விகளை தாம் பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
நடிகர் விவேக்கை நினைவுகூர்ந்து அவர் பேசியது அனைவரையும் நெகிழ வைத்தது.
“நான் முன்னேற வேண்டும் என பெரிதும் விரும்பியவர்கள் இருவர்தான். ஒருவர் என் அம்மா. மற்றொருவர் நடிகர் விவேக். இருவருமே இப்போது இல்லை.
“என்னுடைய திரைப்பட விழாக்களுக்கும் தவறாமல் வந்து என்னை வாழ்த்துவார் விவேக். எப்போதும் நேர்மறை கருத்துகளையே பேசுவார். ‘உதயா நீ வெற்றிபெற வேண்டும்’ என மனதாரச் சொல்வார். அவர் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
“விவேக்கின் முதலாவது நினைவுநாள் நிகழ்வில் அவரது வீடு அமைந்துள்ள விருகம்பாக்கம் சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தேன். தமிழக அரசு என்னைப் போன்று கோரிக்கை விடுத்த பலருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில், அந்தச் சாலைக்கு ‘சின்னக் கலைவாணர்’ எனப் பெயர் வைத்துள்ளது,” என்றார் உதயா.