தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடிகர்களின் நளபாகம்

4 mins read
3a1c5249-81ad-455f-bbaa-67c77fc289c1
சூரி. - படம்: ஊடகம்
multi-img1 of 8

சமையல் வேலை என்பது பெண்களுக்கான வேலை எனும் மனோபாவம் மாறிக்கொண்டிருக்கிறது.

இந்த மனமாற்றம் என்பது சாதாரணமானவர்கள் முதல் பிரபலங்கள் வரை ஏற்பட்டு வருகிறது.

இதற்குக் காரணம் பெண்களின் கல்வியறிவு, பாலின சமத்துவம், பெண்ணும் சம்பாதிப்பது மற்றும் உணவு வகைகள் விதவிதமாக உருவாகி வருவது ஆண்களை ஈர்ப்பதுதான்.

காரணம் எதுவாக இருந்தால் என்ன? இது வரவேற்கத்தக்க மாற்றம்தானே. ஆக... வீடுகளில் மாறிக்கொண்டிருக்கிறது இந்த சமையல் புரட்சி.

இந்தக் கட்டுரையில் சமையற்கலையை விரும்பிச் செய்யும் சினிமா நடிகர்கள் குறித்துப் பார்ப்போம்.

சேதுபதி-65

சிக்கன்-65ஐ (கோழி வறுவல்) மிக ருசியாகச் செய்வார் விஜய் சேதுபதி. ஓய்வு கிடைத்தால் தன் குடும்பத்தாருக்கு இதைச் செய்து கொடுப்பார்.

தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சி ஒன்றில், நடிகை சுஜிதாவுக்கு தனது விருப்பத்துக்குரிய சிக்கன்-65ஐ சொல்லிக் கொடுத்த போதுதான் சேதுபதியின் சமையல் கலை திறமை வெளியே தெரிந்தது.

சூரி சமையல்

சூரிக்கு சமையல் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. தனது முதல் படத்திலேயே (‘வெண்ணிலா கபடிக்குழு’) பரோட்டா சாப்பிடும் போட்டியில் நடித்து ‘பரோட்டா’ சூரி என அழைக்கப்பட்டார்.

மதுரை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ‘அம்மன் உணவகம்’ என சைவ உணவகத்தை ஏழை மக்களுக்காக நடத்தி வரும் சூரி, அசைவப் பிரியர். பிரியாணியை சுவையாகச் சமைப்பார்.

சிம்பு சிக்கன்

சிம்புவின் இறைச்சி, கோழி உணவுச் சமையல் அவரின் குடும்பத்தினருக்கு மிகவும் பிடிக்கும். அவரது வீட்டிற்கு நகைச்சுவை நடிகர் வி.டி.வி.கணேஷ் சென்றிருந்தபோது, பன்னீர் மற்றும் காளான் கலந்த உணவைச் சமைத்துத் தந்தாராம் சிம்பு.

‘சீக்கிரம் திருமணம் செய்துகொள்’ என கணேஷ் கூற, ‘பெண்கள் என்றால் சமைப்பது மட்டும்தான் வேலையா? என் வருங்கால மனைவிக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நானே சமைத்துக் கொடுப்பேன்’ என சிம்பு கூறினாராம். சிம்பு இப்படிச் சொன்னது திரை ரசிகைகளை மிகவும் கவர்ந்தது.

பிரபாஸ் புலாவ்

நடிகை அனுஷ்கா, ‘சமையல் சவால்’ விட்டார். அதன்படி, அனுஷ்கா யாரை சமைக்கச் சொல்கிறாரோ, அவர் அந்தச் சவாலை ஏற்று சமைக்க வேண்டும்.

பிறகு அந்தச் சவாலை இன்னொருவருக்கு விடுப்பார். இதுதான் சமையல் சவால்.

அனுஷ்கா தனது சமையல் சவாலை ‘பாகுபலி’ பிரபாசுக்கு விட்டார்.

பிரபாஸ் அசரவில்லை. ஆந்திராவில் பிரபலமான ‘ரொய்யாலா’ எனும் உணவைச் சமைத்து, அதற்கான செய்முறையையும் வெளியிட்டார்.

பிரபாஸ் சமைத்த ‘ரொய்யாலா’ என்பது இறால் புலாவ் உணவு.

‘தல’ பிரியாணி

அஜித் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் செய்து, செய்து இப்போது நிபுணத்துவமான சமையற் கலைஞராகவே மாறிவிட்டார்.

முன்பெல்லாம் குடும்பத்தினர், படக்குழுவினருக்குச் சமைத்துக் கொடுப்பார். இப்போது, தனது கார் பந்தய, பைக் பயணத் தோழர்களுக்கு சமைத்து தருகிறார்.

“சிக்கன், மட்டன் ‘தம்’ பிரியாணியும் அரைத்த மசாலா மீன் குழம்பும் அஜித்தின் கைவண்ணத்தில் மணமணக்கும்,” என்கிறார்கள் அஜித் சமையலை ருசித்தவர்கள்.

“கோல்கத்தாவில் ‘வேதாளம்’ படத்தின், துர்கா பூசை இறுதிக்காட்சிக்காக இரவு ஏழு மணி முதல் மறுநாள் அதிகாலை ஐந்து மணி வரை படப்பிடிப்பு நடந்தது.

“படப்பிடிப்பு முடிந்து நாங்கள் ஓய்வெடுக்கப் போய்விட்டோம். ஆனால் 70 பேர் கொண்ட படக்குழுவைச் சேர்ந்த எங்களுக்காக காலை உணவாக இட்லி, உப்புமா என விதவிதமாக சமைத்துக்கொடுத்தார்,” என சில நாள்களுக்கு முன் பேட்டி கொடுத்துள்ளார் ராகுல்தேவ்.

இவர் அஜித்துடன் ‘வேதாளம்’, ‘குட் பேட் அக்லி’ படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

நேப்பாளத்திற்குச் சுற்றுலா சென்றிருந்த அஜித், தான் தங்கியிருந்த தங்குவிடுதியின் சமையலறைக்குச் சென்று சில உணவுகளைச் சமைத்துள்ளார்.

சமையலுக்கான பொருள்களை வாங்கிவரச் செய்து, வெங்காயம் நறுக்குவது முதல் முழுச் சமையலையும் அஜித்தே செய்வார்.

பொதுவாக, அஜித் தனது சமையலுக்கு ‘ரெடிமேட்’ மசாலாக்களைப் பயன்படுத்துவதில்லை.

குறிப்பாக, மீன் குழம்பு சமைக்க மிளகாய், மல்லி உள்ளிட்ட பொருள்களை அம்மியில் அரைத்துப் பயன்படுத்துவார். கேரள பாணியில் மீன் குழம்பிற்கு தேங்காய் சேர்ப்பார்.

‘மங்காத்தா’ படப்பிடிப்பின்போது பிரியாணிக்கான செய்முறை குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகை பார்வதி நாயருக்குச் சொல்லித் தந்தாராம் அஜித். இதுபற்றி அவர்கள் ஒரு பேட்டியில் முன்பு தெரிவித்திருந்தனர்.

சூர்யாவின் சமையல் படிப்பு

சூர்யா ஓய்வு நேரங்களில் தன் குடும்பத்தினருக்கு சமைத்துத் தருவார். சமையலைத் தெளிவாக கற்றுக்கொள்வதற்காக சென்னை அடையாறு பகுதியில் சமையல் கலை வகுப்பில் சேர்ந்து படித்தார் சூர்யா.

கமலின் நளபாகம்

உணவு வகைகளை ரசித்துப் புசிக்கக் கூடியவர் கமல்ஹாசன். அதேபோல் சமைப்பதிலும் ஈடுபாடு கொண்டவர். அவருக்கு சமைக்கவும் உண்ணவும் பிடித்தது பெரும்பாலும் அசைவ உணவுகளே.

சோறு ஆக்கு... மாவு ஆட்டு

கே.பாலசந்தரின் ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில், ‘என்ன சமையலோ’ பாடலில் கமல் சமைப்பது குறித்துப் பாடுவார்.

‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தில், ‘எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்’ என ஒரு பாடல் உண்டு.

உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அம்மாவுடனோ மனைவியுடனோ சேர்ந்து சமையல் வேலையில் பங்கெடுங்கள்.

முதலில் சிரமமாகத்தான் இருக்கும். பிறகு சமையல் எனும் கடமை உங்களுக்கே பிடித்துப்போகும்.

ஆண்களே வாங்க, மாவாட்டி தோசை சுடலாம்!

குறிப்புச் சொற்கள்