நடிகை அபிநயாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
‘நாடோடிகள்’ படம் மூலம் தமிழ்த் திரை ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் அபிநயா.
வாய் பேச முடியாத இவர், அதன் பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில், பல படங்களில் நாயகியாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துப் பிரபலமானார்.
தற்போது தமிழில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடிக்க இருக்கிறார் அபிநயா. அண்மையில் இவரும் நடிகர் விஷாலும் காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் விஷால் இது வெறும் வதந்தி என்று தெளிவுபடுத்தினார்.
இதையடுத்து, தாம் 15 ஆண்டுகளாக ஒருவரைக் காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் அபிநயா. ஆனால் தனது காதலர் யார் என்று அவர் கூறவில்லை.
இந்நிலையில், அபிநயாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அபிநயாவே இதை அறிவித்திருக்கிறார்.
விரைவில் திருமணம் நடைபெற உள்ள அபிநயாவிற்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.