திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வைர நகைக் கண்காட்சியில் தாம் அணிந்திருந்த ஆடை குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பதிலளித்துள்ளார்.
மலையாள ஊடகவியலாளர் ரஞ்சினி ஹரிதாசுக்கு அளித்த பேட்டியில், புகைப்படக் கலைஞர்களின் தவறான கோணங்களே பிரச்சினைக்குக் காரணம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
“நிகழ்ச்சியில் புகைப்படக் கலைஞர்கள் தவறான கோணங்களில் படம் எடுப்பதிலேயே கவனம் செலுத்தினர்.
“இதனால் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. ஒருவர் சங்கடப்படும்போது உடலமைப்பின் அசைவு இயல்பாகவே மாறிவிடும்,” என்று ஐஸ்வர்யா லட்சுமி கூறினார்.
“எனது தனிப்பட்ட எல்லை மீறப்பட்டதாக உணர்ந்தேனே தவிர, நான் அணிந்திருந்த ஆடையால் எனக்கு எந்தச் சங்கடமும் ஏற்படவில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
புகைப்படக் கலைஞர்கள் தவறான கோணங்களில் படம் எடுத்ததால் தனக்கு ஏற்பட்ட சங்கடத்தை இணையத்தில் விமர்சித்தவர்கள் புரிந்துகொள்ளத் தவறிவிட்டதாகவும் அவர் ஆதங்கப்பட்டார்.
“ஒரு பெண்ணின் ஆடையில் மட்டும்தான் கலாசாரம் இருக்கிறதா? நம்முடைய நடத்தையில் கலாசாரம் இல்லையா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பெண்களைப் பற்றித் தவறாகப் பேசுபவர்களைக் கண்டிக்க இங்கு யாருமில்லை என்று சுட்டிக்காட்டிய ஐஸ்வர்யா லட்சுமி, பெண்கள் மட்டும் தங்கள் ஆடையிலும் தோற்றத்திலும் எப்போதும் கவனமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் சாடினார்.
ஆரம்பத்தில் இந்த விமர்சனங்களைச் சிரித்துக்கொண்டே கடந்ததாகவும் பின்னர் இது பெரிய விவாதமாக மாறியது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார்.
நாட்டு முன்னேற்றம் பற்றியோ, கைவிடப்படும் பெற்றோர் நலன் பற்றியோ பேசுவதற்கு நேரமில்லாதவர்கள், பெண்ணின் ஆடையைப் பற்றி மட்டும் பேசத் தயங்குவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
