கல்லூரி மாணவர்கள் மத்தியில் கவர்ச்சியாக ஆடை அணிந்து சென்றதாக எழுந்த சர்ச்சைகளுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் நடிகை அமலா பால்.
“நான் பாரம்பரிய உடையான சேலையையும் அணிகிறேன், நவீன உடைகளையும் அணிகிறேன். உங்கள் பார்வையையும் கேமராவையும் சரியாக வைத்தால் எந்தப் பிரச்சினையுமில்லை. தவறு பார்ப்பவர்களின் கண்களில்தான் உள்ளது, என்னிடமில்லை,” என்று கூறியுள்ளார் அமலா பால்.
கேரளாவின் எர்ணாகுளத்தில் இருக்கும் கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அமலா பால், மாணவர்கள் மத்தியில் உற்சாகமாக உரையாடினார். இந்த நிகழ்வு காணொளியாக சமூக ஊடகங்களில் பரவியது.
இந்நிலையில், அமலா பால் கவர்ச்சியாக ஆடை அணிந்திருந்தார் என்றும் மாணவர்கள் மத்தியில் இதுபோல் உடை அணிந்து கல்லூரிக்கு வந்தது தவறான உதாரணமாகிவிடும் என்றும் வலைவாசிகள் பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்குப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதிலடி கொடுத்துள்ள அமலா பால், “எனக்கு எந்த ஆடை வசதியாக இருக்கிறதோ அதனை அணிகிறேன். இதில் என்ன பிரச்சினை உள்ளது? எப்படிப்பட்ட ஆடையை அணியவேண்டும் என ஒவ்வொரு பெண்ணுக்கும் தெரியும். அது அவர்களது தனிப்பட்ட விஷயம். அதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமையில்லை.
“நான் மாணவர்களுக்குச் சொல்வது, ‘உங்களுக்கு வசதியான ஆடையை நீங்கள் அணியுங்கள்’ என்பதுதான். நான் அணிந்த ஆடை மாணவர்களுக்குத் தவறாகப் படவில்லை. தவறாகப் பார்ப்பவர்களிடம்தான் பிரச்சினை உள்ளது,” என்று கூறியுள்ளார் அமலா பால்.
அமலா பால் - ஜகத் தேசாய் தம்பதிக்குக் கடந்த ஜூன் 11ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இலை (ILAI) எனப் பெயர் வைத்துள்ளனர்.

