நடிகையான பொறியியலாளர் இவானா வருண்

நடிகையான பொறியியலாளர் இவானா வருண்

2 mins read
a756e8e2-b89b-44ba-ba2b-7aae0fe0d8e4
‘அந்தரன்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. - படம்: இவானா வருண் / ஃபேஸ்புக்

‘அந்தரன்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார் இவானா வருண். சொந்த ஊர் ஜம்ஷட்பூர். தந்தை ஒப்பந்ததாரர். தாயார் இல்லத்தரசி.

சிறு வயது முதலே மேடையேறி தனது திறமையை வெளிப்படுத்துவதில் ஆர்வம் அதிகம் என்கிறார் இவானா.

“அதேநேரம் படிப்பிலும் நான் படுசுட்டி. வகுப்பில் எப்போதுமே நான்தான் முதல் மாணவி. அப்பாவிற்கு நான் நன்றாகப் படிக்க‌ வேண்டும் என்பதுதான் ஆசை. அம்மாவுக்கோ என்னிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அதிக விருப்பம்.

“சிறு வயதில் பள்ளி விடுதியில்தான் தங்கிப் படித்தேன். உனக்குப் பிடித்தவற்றைச் செய், ஆனால், படித்துவிட்டுச் செய் என்பதுதான் தந்தை எனக்கு அளித்த முக்கியமான அறிவுரை,” என்கிறார் இவனா.

மருத்துவராக வேண்டும் என்பதுதான் இவரது கனவாக இருந்துள்ளது. வளர வளர நடிப்பின் பக்கம் கவனம் திரும்பிவிட்டதாகச் சொல்கிறார்.

எனினும், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு பொறியியல் படிப்பை வெற்றிகரமாக, அதிக மதிப்பெண்களுடன் முடித்துள்ளார் இவானா.

“எனக்கும் என் அம்மாவிற்கும் ஒரே கனவுதான். அது நான் நடிகையாக வேண்டும் என்பதுதான். என்னைவிட இந்த இலக்கை நான் அடைந்துவிட வேண்டும் என்பதில் என் அம்மா தீவிரமாக இருந்தார்.

“இதுவே எனது வாழ்க்கையின் இலக்காக மாறிப்போனது. நாம் இந்த உலகில் ஒரு மனிதப் பிறவியாக வலம் வருகிறோம். நாம் இன்னொருவராக மாறி நடிப்பது பெரும் சவால் என்பதே என் கருத்து.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“இந்தச் சவால் எனக்குப் பிடித்திருந்தது,” என்று சொல்லும் இளம் நாயகி இவானா, முறைப்படி கதக் நடனம் கற்றுத் தேர்ந்தவர்.

நிறைய மேடை நாடகங்களிலும் நடித்த அனுபவமும் உண்டாம். கடந்த 2018ஆம் ஆண்டு ‘மிஸ் இந்தியா’ அழகுப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

மேலும், இந்தி நடிகர் அனுபம் கேர் நடிப்புப் பயிற்சியிலும் படித்துள்ளார். ‘கொவிட்-19’ காலத்தில் பலருக்கு நேர்ந்ததுபோல் இவானாவுக்கும் வாழ்க்கைப் பயணத்தில் பெரிய இடைவெளி ஏற்பட்டதாம். அனைத்தையும் மீண்டும் தொடக்கத்திலிருந்து செய்ய வேண்டியிருந்ததாம்.

“‘எ ஃபிலிம் பை மணிரத்னம்’ என்ற வரிகளுக்குக் கீழே, நடிகர்கள் பட்டியலில் என் பெயர் இருக்க வேண்டும்.

“அடுத்து, விஜய் சேதுபதி, மாதவன் இவர்களுடன் நடிக்க வேண்டும். புதுமுகங்களுடனும் நடிக்க வேண்டும்.

“ஒருசில கதைகள் கேட்டிருக்கிறேன். கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும். திரைப்படங்களில் நடிப்பதற்குமுன் கதை, கதாபாத்திரங்களில் தீவிரக் கவனம் செலுத்தியதில்லை.

“ஒரு கதாபாத்திரம், ஒரு காட்சி என எதுவாக இருந்தாலும், இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம் என்று எளிதில் தீர்மானித்துவிடுவேன்.

“ஆனால், உள்ளே நுழைந்துப் பார்த்த பிறகுதான் இது சாதாரண விஷயமல்ல எனப் புரிந்துகொண்டேன். எனக்குக் கிடைக்கும் வாய்ப்புக்கு நிச்சயம் உண்மையாகவும் நேர்மையாகவும் வேலை செய்வேன்,” என்கிறார் இவானா வருண்.

குறிப்புச் சொற்கள்