தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கண் கலங்கிய ‘லப்பர் பந்து’ பட நடிகை

2 mins read
421fb22c-40a1-43a5-a46a-ec716dadbf8e
‘லப்பர் பந்து’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார் நடிகை சுவாசிகா.

கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத் திரையுலகில் அறிமுகமான இவர், பின்னர் தமிழிலும் நடித்தார். எனினும், அதன் பிறகு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், ‘லப்பர் பந்து’ படம் தனது திரைப்பயணத்தில் புதிய திருப்புமுனையாக அமைந்துள்ளது என்கிறார் சுவாசிகா.

இப்படக்குழுவினர் நடத்திய நன்றி அறிவிப்புக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், தாம் பல கனவுகளுடன் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்ததாகவும் எதிர்பார்த்த எதுவும் கைகூடாததால் மிகுந்த வருத்தத்துடன் மீண்டும் தன் தாயுடன் கேரளாவுக்குச் சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

“இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சமூகத்துக்கு வந்து தரமான ஒரு படைப்பில் பங்கேற்பேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

“சென்னையில் சொந்த வீடு கட்ட வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் ஒரு கட்டத்தில் நம்பிக்கை இழந்துவிட்டேன். இப்போது சொந்த வீடு வாங்கும் ஆசை மனதில் மீண்டும் துளிர்விட்டுள்ளது,” என்றார் சுவாசிகா.

இவ்வாறு கூறியபோது அவரது கண்கள் கலங்கின.

படப்பிடிப்பின் போது பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இவரது நடிப்பு குறித்து எந்தக் கருத்தும் கூறவில்லையாம். இதனால் தான் அச்சம் அடைந்ததாகக் குறிப்பிட்டார் சுவாசிகா.

“சார் இப்போதாவது உங்கள் கருத்தை சொல்வீர்களா, உங்களுடைய விமர்சனத்துகாகத்தான் நான் இன்னமும் காத்திருக்கிறேன்,” என்று சுவாசிகா மீண்டும் தெரிவித்தார்.

இதையடுத்துப் பேசிய இயக்குநர் தமிழரசன், “சுவாசிகா நன்றாகத்தான் நடித்தார். ஆனால் நான் கருத்து சொல்வதைவிட ரசிகர்களின் கருத்துதான் முக்கியம். அவர் இந்தப் படத்தில் நடித்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்,” என்றார்.

இதைக் கேட்ட சுவாசிகா மீண்டும் கண்கலங்கினார்.

இவர் தமிழில் ‘கோரிபாளையம்’, ‘மைதானம்’, ‘சாட்டை’, அப்புச்சி கிராமம்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தவர்.

குறிப்புச் சொற்கள்