நடிகை மாளவிகா மோகனன் அண்மையில் அளித்திருக்கும் ஒரு பேட்டியில், நடிகர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் நடிகைகளுக்கு மட்டும் ஏனோ கிடைப்பதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.
“ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அதற்கு நடிகர்கள்தான் முக்கிய காரணம் என்கிறார்கள். அதேசமயம் படம் நன்றாக ஓடவில்லை எனில், முதலில் நாயகியைத்தான் குறைசொல்கிறார்கள். தென்னிந்திய சினிமாவில் இதுபோன்ற நிலை சர்வசாதாரணமாகக் காணப்படுகிறது,” என்று அவர் கூறியுள்ளார்.
“தென்னிந்திய திரையுலகிற்கும் இந்திப் படவுலகிற்கும் கலாசார ரீதியாக வேறுபாடுகள் இருப்பதை கண்கூடாகப் பார்க்கிறேன்.
“எந்த மொழியாக இருந்தாலும் ஒரு திரைக்கலைஞராக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
“வெவ்வேறு மொழி, உணவு, கலாசாரங்களையும் அறிந்துகொள்ள வேண்டும்.
“காரணம், பொதுவாக நடிகர்கள் என்பவர்கள் நவீன நாடோடிகளைப் போன்றவர்கள்தான். ஒருநாள் ஹைதராபாத் என்றால், அடுத்த நாள் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு கிராமத்திற்கு என இப்படி மாறி, மாறி பயணம் செல்லவேண்டியது இருக்கும். அதனால், நடிகர்கள் தாங்கள் இருக்கும் இடங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்,” என்று மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.