கிட்டத்தட்ட ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சிங்கப்பூருக்கு வந்துள்ளார் நடிகை நளினி.
நடிப்புக்கும் அப்பால் ஆன்மிகத்தில் முழுமூச்சாக இறங்கியுள்ள அவர், அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் கோவிலில் அக்டோபர் 9ஆம் தேதி மாலை நடைபெற்ற மகாசாய் விளக்குப் பூசையில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். அவருடன், சாய் லோகபாலா (OPC) பிரைவேட் லிமிடெட் தலைமை நிர்வாகியும் நிர்வாக இயக்குநருமான பாலசரவணன் சொற்பொழிவாற்றினார்.
107வது சாய்பாபா மகா சமாதியை முன்னிட்டு லயன் சிட்டி மீடியா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சிங்கப்பூர், ஆத்தங்குடி சாய்பாபா அறக்கட்டளையுடன் இணைந்து அந்தப் பூசைக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இவ்வாண்டு தொடக்கத்தில்தான் மலேசியாவின் பத்துமலைக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டிருந்தார் நடிகை நளினி.
அதே ஆன்மிகத்தினால் நெடுங்காலம் கழித்து மீண்டும் சிங்கப்பூருக்கு வந்துள்ளதில் அவர் பெருமகிழ்ச்சி தெரிவித்தார்.
முதன்முதலில் 1980களில் நட்சத்திர விழாவுக்காக நடிகர் பிரபு, இயக்குநர் கங்கை அமரன், பாடகர்கள் டி.எல்.மகாராஜன், தீபன் சக்கரவர்த்தி ஆகியோருடன் சிங்கப்பூர் வந்திருந்தார் நடிகை நளினி.
“அப்போது என்னிடம் அவர்கள் கூறியது - சிங்கப்பூர் போன்ற ராசியான ஊர் எதுவுமே இல்லை. இதன்பின் உலக நாடுகள் அனைத்துக்கும் செல்வீர்கள். அப்படியே நடந்தது. சிங்கப்பூரில் காலெடுத்து வைத்தவர்கள் வாழ்க்கையில் என்றும் கீழே இறங்க மாட்டார்கள் என்பது உண்மை.
“சிங்கப்பூர் எனக்கு இன்னொரு தாய்நாடு போன்றது. ‘ஊருவிட்டு ஊரு வந்து’ படப்பிடிப்புக்காக மூன்று, நான்கு மாதங்கள் நாங்கள் இங்குதான் தங்கினோம். என் பிள்ளைகள் பிறந்த வேளையில் அவர்களுக்கு இந்திய உணவு ஒத்துக்கொள்ளவில்லை. முழுக்க முழுக்க சிங்கப்பூர் உணவுதான் சாப்பிட்டு வந்தார்கள். சாருக்கும் (திரு ராமராஜன்) பிடித்த ஊர் சிங்கப்பூர்தான்,” என நினைவுகூர்ந்தார் நடிகை நளினி.
தொடர்புடைய செய்திகள்
“நாங்கள் இங்கு வரும்போது என்னென்ன இடத்துக்குச் செல்வோம் என்பதைப் பட்டியலிட மாட்டோம்; என்னென்ன உணவு உண்ணலாம் என்பதையே திட்டமிடுவோம்.
“அவர்களுக்கு மீ கோரெங், நாசி லெமாக் பிடிக்கும்; எனக்கு இக்கான் பிலிஸ் பிடிக்கும். இங்குள்ள ஒவ்வொரு சாலையையும் இடத்தையும் பார்த்தால் எனக்குப் பழைய நினைவுகள் வருகின்றன,” என்றார் அவர்.
திரைப்படம் முதல் சின்னதிரை வரை
திரையுலகில் முன்னணிக் கதாநாயகியாக 1980களில் அறிமுகமாகினார் நடிகை நளினி.
‘உயிருள்ளவரை உஷா’, ‘நூறாவது நாள்’, ‘24 மணி நேரம்’, ‘மனைவி சொல்லே மந்திரம்’ என ஏழு ஆண்டுகளில் 120 திரைப்படங்கள் நடித்து, தனக்கென ஒரு பெயரை அவர் உருவாக்கிக் கொண்டார். திருமணமானபின் நடிப்பிற்கு இடைவெளிவிட்ட அவர், 2000ல் தொலைக்காட்சிமூலம் மீண்டும் நடிப்பிற்குத் திரும்பினார்.
“நான் 80களில் நடிக்கவந்தபோது ஒரு களிமண்தான். இயக்குநர் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் செய்துகொண்டிருந்தேன். காதல், சோகம், அமைதி, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளையே வெளிப்படுத்தினேன். 2000ல் ‘கிருஷ்ணதாசி’ நாடகத்தில் பாதகமான கதாபாத்திரத்தில் நடித்தது என் வாழ்வையே மாற்றியது. அந்நாடகத்தைப் பார்த்தால் ‘நளினி, இது நீ கிடையாது’ எனச் சொல்லத் தோன்றும். இன்று நான் துணிவுடன் பேசுவதற்குக் காரணம் ‘கிருஷ்ணதாசி’தான்,” என்கிறார் நளினி.
“அதிலிருந்து நகைச்சுவை நடிகராகப் பரிணமித்ததற்குக் காரணம் இயக்குநர் எஸ் என் சக்திவேல், ராதிகா சரத்குமார். என்மேல் பெரிய நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்தனர். இன்று வரை ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’வுக்காகத்தான் நான் பெரிதும் அறியப்படுகிறேன்,” என்றார் நளினி.
“கதாநாயகியாகக் நம் கண்தான் பேசும். நகைச்சுவைக்கோ நம் உடல் நம் பேச்சைக் கேட்கக்கூடாது; உடல் பாவனைகள் முக்கியம். இயக்குநர் சக்திவேல் கற்பித்தபின் நகைச்சுவை சுலபமாக வந்தது. என் மனமும் மகிழ்ச்சியடைந்தது,” என்றார் நளினி.
குருகுலம் தொடங்குவதே இலட்சியம்
“நான் என் குடும்பத்திற்காகத்தான் நடிக்கவந்தேன். என் கனவு, ஒரு குருகுலம் தொடங்குவதே. தேவாரம், திருவாசகம் குழந்தைகளுக்குத் தெரிய வேண்டும். படிப்பைவிடக் கட்டுப்பாடு முக்கியம். ஏனெனில், அந்தக் காலத்தில் வீட்டில் பெரியவர்கள் இருந்தார்கள். இன்றோ எல்லாரும் தனிக்குடித்தனம் செல்ல விரும்புகிறார்கள்; சொந்தங்களைப் பற்றித் தெரிவதில்லை,” என்று கூறி வருத்தப்பட்டார் நளினி.
இந்த ஆசையை விதைத்தது, தன் ஆசிரியர்களே என்ற அவர், இன்றுவரை தன் பாலர்பள்ளி ஆசிரியருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.
“பெண்கள் என்றாலே சேலை அதிகம் இருக்கும் அல்லவா? ஒருநாள் அணிந்த சேலையை மீண்டும் அணியமாட்டேன். நான் பல ஆண்டுகளாகச் சேலைக்கெனவே தனி வீடு வைத்துள்ளேன். எனக்கு வேறெதிலும் நாட்டமில்லை. புதிதாக ஒரு சேலை கட்ட கட்ட நம் எண்ணங்களும் வண்ணமயமானதாக இருக்கும்,” என்றார் நளினி.
“சேலைகள் வாங்கும்போது, வசதியைப் பார்ப்பேன்; அதில் பட்டு இருக்க வேண்டும் எனப் பார்ப்பேன். தீபாவளிக்கென நான் 30 சேலைகள் வாங்கி வைத்துவிட்டேன்; அன்றாடம் ஒன்றொன்று கட்டிக் கொண்டுவருகிறேன். செவ்வாய், புதன் என்றால் மஞ்சள், பச்சைக் கலந்து அணிவேன்.
“சிங்கப்பூரில் பூனம் சேலைகள் மிகவும் பிரபலம். எங்கள் சாருக்கு (திரு ராமராஜன்) அவை அதிகம் பிடிக்கும். சிங்கப்பூர் மக்கள் நாள்தோறும் அழகான சேலைகள் கட்டிக்கொண்டு கோயிலுக்கு வருவதைக் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார் நளினி.
நடிகை நளினி அடுத்த வாரத் தொடக்கம்வரை சிங்கப்பூரில் இருக்கத் திட்டமிட்டுள்ளார்.