என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வு எனில், தானும் விளம்பரப் பதாகைகளில் காட்சி அளிப்பதுதான் என்கிறார் நடிகை பூஜிதா பொன்னாடா.
கடவுள் நேரில் வந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், என்ன சாப்பிட்டாலும் உடல் பருமனாகக் கூடாது என்ற வரத்தைத்தான் கேட்பேன் என்று புன்முறுவலுடன் பேச்சைத் தொடர்கிறார் பூஜிதா.
“நான் ஒரு உணவுப் பிரியை. எந்த உணவையும் ஆசையோடு, ரசித்து ருசித்துச் சாப்பிடுவேன்.
“பொதுவாக சீனி, உப்பு, எண்ணெய் அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்று உணவு நிபுணர்கள் அறிவுறுத்துவார்கள்.
“எனினும், சில நேரங்களில் உணவுக் கட்டுப்பாட்டை மீறும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. அதனால் தான், கடவுளிடம் என்ன சாப்பிட்டாலும் எடை போடாமல் இருக்கவேண்டும் என வரம் கேட்க ஆசைப்படுகிறேன்,” என்று விளக்கமளிக்கிறார் பூஜிதா.
தெலுங்குச் சினிமாவின் முன்னணி நடிகையாகத் திகழும் பூஜிதா பொன்னாடா, தமிழில் `7’, ‘பகவான்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இன்ஸ்டகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இவருக்கு லட்சக்கணக்கிலான ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது தமிழில் பல படங்களில் நடித்து வரும் பூஜிதா, தமிழக ஊடகத்துக்கு அளித்துள்ள நேர் காணலில், பல விஷயங்கள் குறித்தும் தனது எண்ண அலைகளைப் பகிர்ந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“திரையுலகில் நாமும் ஒரு நட்சத்திரமாக ஜொலிப்போம் என ஆரம்பத்தில் எந்தச் சிந்தனையும் என் மனதில் எழுந்ததில்லை. பொறியியல் படித்துவிட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.
“அப்போது ஒரு பொழுதுபோக்குக்காக நான் நடித்த சில குறும்படங்கள் (ஷார்ட் பிலிம்ஸ்) அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அவை பெரிய அளவில் வெற்றிபெற்றதால் விளம்பரங்கள், படங்களில் நடிப்பதற்குத் தானாக அழைப்பு தேடி வந்தது.
“எனது சிறிய வயதில் சென்னை தியாகராயநகரில் பெரிய நாயகன்களின் விளம்பரப் பதாகைகள் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்பதைக் கண்டு வியந்து போயிருக்கிறேன். ஆனால், ஒரு காலகட்டத்தில் அந்தப் பதாகையில் நமது படமும் வரும் என்று கற்பனை கூட செய்து பார்த்தது கிடையாது.
“ஏராளமான துணிக்கடைகள், நகைக்கடைகளின் காட்சிக் கூடங்களில் இப்போதும் என் புகைப்படம் இருப்பதைக் கண்டு நெகிழ்ந்து போகிறேன்,” என்கிறார் பூஜிதா.
“சில நடிகைகள் கவர்ச்சியாக நடிக்கிறார்கள், சில நடிகைகள் அதற்கு விதிவிலக்காக உள்ளனர். என்னைக் கேட்டால் கவர்ச்சி என்பது கதையைப் பொறுத்தது. கதைக்குத் தேவையெனில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம்.
“அதேவேளையில் எனது படங்களில் கவர்ச்சி என்பது ரசிக்கும்படியாக இருக்குமே தவிர, முகம் சுளிக்கும் அளவுக்கு இருக்காது,” என உத்தரவாதம் அளிக்கிறார் பூஜிதா.
“சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் இடையே போட்டி இருக்கிறது. அது ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது குறித்து பொறாமை படக்கூடாது. மற்றவர்களின் வாய்ப்பை தட்டிப் பறிப்பதும் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று சொல்லும் பூஜிதா, தான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை,” என்கிறார்.
“நீச்சல் ஆடை அணிந்து நடிக்கமாட்டேன். ஏனெனில், அந்த உடை எனக்குப் பொருத்தமாக இருக்காது. ஆடை விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பேன்,” என்று கூறியுள்ளார் பூஜிதா பொன்னாடா.