சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘பராசக்தி’ படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் அடுத்த படத்திலும் அவருக்கு நாயகியாக ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா இணைந்து நடித்த ‘பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அந்தப் படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.
‘பராசக்தி’ படத்தை முடித்த பிறகு, சிவகார்த்திகேயன் ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பை டிசம்பரில் தொடங்க படக்குழு தயாராகி வருகிறது.
இந்தப் படத்திலும் நாயகியாக நடிக்க ஸ்ரீலீலா ஒப்பந்தமாகியிருக்கிறார். தனது வசீகரமான புன்னகையாலும் நடிப்புத் திறமையாலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ள ஸ்ரீலீலா, தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் ஏற்கெனவே தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார்.
‘புஷ்பா 2’ திரைப்படத்தின் ‘கிஷ்க்’ என்ற பாடலின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார் ஸ்ரீலீலா. அதன் பிறகு அந்த ஒரே பாட்டில் ‘பான் இந்தியா’ நட்சத்திர தகுதியைப் பெற்றார்.
சமூக வலைத்தளங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர், இன்ஸ்டகிராமில் வெளியிடும் ஒவ்வொரு பதிவிற்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தனது அழகு, நடிப்புத் திறமைக்கு அப்பால், ஸ்ரீலீலா பெருந்தன்மைக்கும் பெயர் பெற்றவர். தனது 22 வயதிலேயே, அவர் ஓர் ஆதரவற்ற இல்லத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து, பொறுப்பான ஒரு தாயாக அவர்களை வளர்த்து வந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது மீண்டும் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். பலருக்கு உதவுவதற்கு மனதில் ஏதாவது ஒரு உந்துதலோ, அவரது சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற ஏதாவது சம்பவமோ காரணமாக இருக்கலாம். அதுபற்றிய கேள்வி ரசிகர்களுக்கு இப்போதும் உள்ளது. ஆனால், நடிகை இதுவரை அதற்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
ஸ்ரீலீலா எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து நல்ல காரியங்கள் செய்து கொண்டு இருந்தால் போதும் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.

