‘அசுரன்’, ‘துணிவு’ படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த நடிகை மஞ்சு வாரியர், மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது ‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடித்துள்ள மஞ்சு வாரியரிடம் ரூ.5.75 கோடி இழப்பீடு கேட்டு ‘ஃபூட்டேஜ்’ பட நடிகை ஷீத்தல் தம்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், மஞ்சு வாரியரின் மூவி பக்கெட் நிறுவனம் தயாரித்த ‘ஃபூட்டேஜ்’ படத்தில் போதிய பாதுகாப்பின்றி காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் தனக்கு காயம் ஏற்பட்டதாகக் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
அந்தச் சமயத்தில் ஆம்புலன்ஸ் உட்பட எந்த வசதிகளையும் தயாரிப்பு நிறுவனம் செய்து கொடுக்காததால் தனது உடல்நிலை மேலும் மோசமானதாகவும் படத்தில் நடிப்பதற்காகத் தனக்கு ரூ.1.80 லட்சம் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் ஷீத்தல் தம்பி கூறியுள்ளார்.
படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு பல லட்சம் ரூபாய் செலவானதாகக் கூறியுள்ள அவர், “எனது காயங்கள், மருத்துவச் செலவிற்காக ரூ.5.75 கோடி இழப்பீட்டை 30 நாள்களுக்குள் வழங்கவேண்டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வேன்,” என்று தெரிவித்துள்ளார்.
மஞ்சு வாரியர் ‘விடுதலை 2’ , ‘மிஸ்டர் எக்ஸ்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

