நாம் என்ன செய்கிறோம் என்பதில் நமக்கு எப்போதும் நம்பிக்கை தேவை என்று கூறியுள்ளார் நடிகை சிம்ரன்.
அண்மையில் விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது, தமக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.
“சில மாதங்களுக்கு முன்பு ஒரு படத்தில் நடித்தபோது, சக நடிகையிடம் அவர் எதற்காக அந்தப் படத்தை தேர்வு செய்து நடித்தார் எனக் கேட்டேன்.
“அதற்கு, ‘உங்களைப்போல் வயதான, (ஆன்ட்டி) கதாபாத்திரத்தில் நடிப்பதைவிட, இப்போது நான் நடிக்கும் வேடம் பரவாயில்லை’ என்று பதிலளித்தார்.
“இப்படியோர் புரிதலற்ற பதிலை எதிர்பார்க்காததால் நான் அதிர்ச்சி அடைந்தேன். எனது 25வது வயதிலேயே ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் அம்மாவாக நடித்துவிட்டேன். ஒன்றுக்கும் உதவாத கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட முக்கியமான ‘ஆன்ட்டி’ வேடங்களில் நடிக்கலாம்,” என்றார் சிம்ரன்.
அவரிடம் திமிராகப் பேசிய அந்த நடிகை யாராக இருக்குமெனப் பலரும் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ‘குட் பேட் அக்லி’ படத்தில் தாம் இடம்பெறும் காட்சி தொடர்பான காணொளியை வெளியிட்டிருந்தார் சிம்ரன். அஜித் ரசிகர்களுக்கு இது பெரும் விருந்தாக அமைந்துள்ளது.
‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வசூல் ரீதியில் அசத்தி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, தனது கதாபாத்திரத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்தும் அஜித்துடன் நடித்தது பற்றியும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் நடிகை சிம்ரன்.
“கௌரவ கதாபாத்திரமாக படத்திற்குள் வந்தேன். படத்திலிருந்து வெளியே செல்லும்போது உங்களின் அன்பைப் பெற்றிருக்கிறேன். அஜித்துடன் மீண்டும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்தது சிறந்த அனுபவம்.
“இப்படியான ஓர் அருமையான பயணத்தைக் கொடுத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் படக்குழுவினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என அதில் குறிப்பிட்டிருந்தார்.
அதை அஜித் ரசிகர்கள் மீண்டும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

