ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டி வரும் நடிகை நித்யா மேனன், நடிகைகளிடம் ஆண்கள் நடந்துகொள்ளும் விதத்தைக் கண்டித்துள்ளார்.
கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரான நித்யா மேனன், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடித்துத் தனி முத்திரை பதித்தவர்.
தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் நித்யா மேனன், தனுசுடன் இப்போது ‘இட்லி கடை’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கு முன்னதாக தனுசுடன் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்காக தேசிய விருதையும் பெற்றிருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.
அதேபோல், நடிகர் விஜய் சேதுபதியுடன் ‘தலைவன் தலைவி’ படத்திலும் நடித்திருக்கிறார். அப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகி வருகிறது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள நித்யா மேனன், திரையுலகில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ஒரு சிலரின் தவறான பார்வை, சமூக எண்ணங்கள் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
“ஆண்களில் பலரும் ஒரு சாதாரணப் பெண்ணிடம் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதுபோல் நடிகைகளிடம் நடந்துகொள்வதில்லை.
“நடிகை என்றால் எளிதாகத் தொட்டுப் பேசலாம் என்று நினைக்கிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
“நாங்கள் ஏதேனும் ஒரு விழாவுக்குச் சென்றால், ரசிகர்கள் கைகொடுக்கும்படி கேட்கிறார்கள். இதே கேள்வியை ஒரு சாதாரணப் பெண்ணிடம் யாரும் கேட்கமாட்டார்கள். ஆனால், நடிகைகளிடம் சர்வ சாதாரணமாகக் கேட்கிறார்கள். எளிதாகத் தொட்டுப் பார்க்க நாங்கள் என்ன பொம்மையா?” என தன் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
“பொது இடங்களுக்கு வரும் நடிகைகளுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதற்கு கட்டாயப்படுத்துவதும் ஆங்காங்கே இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
“நாங்களும் உங்களைப் போல் மனிதர்கள்தான். உங்களைப் போலவே நாங்களும் எங்களது வேலையைத்தான் செய்கிறோம். எனவே, சுதந்திரமாகச் செயல்பட எங்களை அனுமதியுங்கள். எங்களைப் பின்தொடராதீர்கள்,” எனக் கேட்டுக்கொண்டுள்ளார் நித்யா மேனன்.
“பொதுவாக எனக்குத் தெரியாத யாரையும் தொட்டுப் பேசுவது பிடிக்காது. அதனால்கூட அடுத்தவர்களுடன் கைகுலுக்க நான் மறுத்திருக்கிறேன். ஆனால், அதனை ஒரு பெரிய பிரச்சினையாக இப்போதும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்,” என வருத்தப்பட்டுள்ளார் நித்யா.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் நித்யா மேனன் கலந்துகொண்டபோது அங்கிருந்த ரசிகர் ஒருவர் நித்யா மேனனிடம் கைகுலுக்க விரும்பினார். ஆனால், நித்யா மேனனோ கைகூப்பி கும்பிட்டுவிட்டு, “எனக்கு ஜலதோஷம்,” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
பின்னர், மேடையில் இருந்த நடிகருக்குக் கைகொடுத்து அவரைக் கட்டிப்பிடித்தார் நித்யா மேனன். இணையத்தில் பரவும் இந்தக் காணொளிக்கு விளக்கம் கொடுக்கும் வகையில்தான் அவர் இப்போது பேசி இருக்கிறார்.
பெண்கள் அழுவது அவர்களின் பலமா அல்லது பலவீனமா என நித்யா மேனனிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “பெண்களுக்கு அழுகை என்பது நிச்சயம் ஒரு ஆயுதம்.
“ஆனால், ஆண்களை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. ஏனெனில் மிக எளிதில் அவர்கள் அழமாட்டார்கள். சிறுவயதிலேயே ஆண்கள் அழக்கூடாது என்று சொல்லி வளர்க்கப்படுகின்றனர்.
“பொதுவாக அழுகை என்பது மிகச்சிறந்த மருந்து. இதன் மூலம் உங்கள் வலிகள் குறையும். ஒரு பிரச்சினை ஏற்படும்போது அழுதுவிட்டால் உங்கள் பாரம் இறங்கிவிடும். அது உங்களை வலிமையாக்கும். அடுத்த வேலையை நோக்கி நீங்கள் எளிதாக நகர்ந்து சென்றுவிடலாம்,” என்று தெரிவித்தார்.
“பயணம் செய்வதற்கு எனக்கு அலாதி பிரியம் என்பதால் விமானியாக விரும்பினேன். அல்லது, வனஉயிரிப் புகைப்படக்காரர் போல வாழ ஆசைப்பட்டேன். புகைப்படம் எடுப்பதில் எனக்கு தனி ஆர்வம் இருக்கிறது.
“ஆனால், சினிமாவைவிட்டு விலக முடியாத சூழலுக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளேன்,” என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார் நித்யா மேனன்.

