நடிகர் கருணாசின் மகன் கென் கருணாஸ் ‘அசுரன்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறிமுகமானார்.
அதன் பின்னர் நடிகர் தனுஷுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றி அனுபவம் பெற்ற பிறகு அவர் தாமே இயக்குநராக மாறியுள்ளார்.
இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகும் படம் ‘யூத்’. அப்படத்தின் நாயகனும் கென்தான்.
நாயகியாக ‘சிறை’ புகழ் அனிஷா அனில்குமார் நடிக்க, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
படத்தின் சிறப்புக்காட்சியைப் பார்த்த பலரும் ‘அற்புதம்’ என கென் கருணாசைப் பாராட்டியுள்ளனர்.
தற்போது படத்தை விளம்பரம் செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
“இப்படத்தின் கதையை பல நடிகைகளிடம் கூறினேன். கதை பிடித்திருக்கிறது எனச் சொன்னாலும் ஒருவரும் நடிக்க முன்வரவில்லை. சிலர் வேறு கதாபாத்திரத்தை ஒதுக்குமாறு கேட்டனர். ஒருசிலரோ நான் அனுப்பிய குறுந்தகவலுக்குப் பதில்கூட அனுப்பவில்லை.
“ஆனால் இன்றோ, இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘முட்டக்கலக்கி’ பாடலை என்னுடன் நடிக்க மறுத்த நடிகைகள் சிலரே சமூக ஊடகங்களில் பகிர்ந்துவருகின்றனர். இதுவும் ஒரு வகையில் படத்துக்கு விளம்பரமாக மாறிவிட்டது,” என்று கென் கருணாஸ் கூறியுள்ளார்.

