மன அழுத்தம் காரணமாக சமூக ஊடகங்களிலிருந்து விலகும் நடிகைகள்

மன அழுத்தம் காரணமாக சமூக ஊடகங்களிலிருந்து விலகும் நடிகைகள்

2 mins read
7a5aa6e7-ce24-4d15-96be-d92a4835369c
ஐஸ்வர்யா லட்சுமி. - படம்: பின்டர்ரஸ்ட்
multi-img1 of 2

திரையுலகப் பிரபலங்கள் ரசிகர்கள், பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளச் சமூக ஊடகங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

எனினும், அண்மைக்காலமாகப் பல முன்னணி நடிகைகள் சமூக ஊடகங்களிலிருந்து விலகி வருவது திரையுலகில் ஒரு புதிய போக்காக மாறியுள்ளது.

புகழையும் ஆதரவையும் தந்த சமூக ஊடகங்கள், தற்போது மன அழுத்தத்திற்கும் எதிர்மறை அனுபவங்களுக்கும் காரணமாக அமைகின்றன என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் புகைப்படங்களைத் தவறாக மாற்றிப் பரப்புவது, இணையத் தாக்குதல்கள், அவதூறான கருத்துகள் போன்றவை நடிகைகளின் மனநிலையைக் கடுமையாகப் பாதிக்கின்றன.

இதனால், மன அமைதியையும் தனியுரிமையையும் பாதுகாக்கும் நோக்கில் பலர் சமூக ஊடகங்களிலிருந்து விலகி வருகின்றனர்.

இந்த வரிசையில் பிரபல தென்னிந்திய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அண்மையில் இணைந்தார்.

இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், “சமூக ஊடகப் பக்கங்களில் நான் பாதுகாப்பாக உணர்ந்ததே இல்லை.

“பலர் என் உடலமைப்பு குறித்துத் தேவையில்லாமல் விமர்சித்தார்கள்; என் புகைப்படங்களை மாற்றிப் பதிவிட்டார்கள்,” என்றார் அவர். இந்தச் செயல்கள் தனக்கு மிகுந்த அச்சத்தையும் மன அழுத்தத்தையும் தந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அங்கு பதியப்படும் ஒரே ஒரு எதிர்மறைக் கருத்துகூட உலகத்தில் உள்ள அனைவரும் நம்மை வெறுப்பது போன்ற உணர்வைக் கொடுத்துவிடும்,” என்றும் அவர் விவரித்தார்.

நேரில் மனிதர்கள் வந்து பேச முற்படும்போதுகூட அந்த உரையாடலைச் சீக்கிரமாக முடித்துவிட்டு ஓடிவிட வேண்டும் என்று தோன்றுவதாக அவர் குறிப்பிட்டார்.

திரையுலகச் செய்திகளைத் தெரிந்துகொள்ளத் தமது செல்லப் பிராணியின் கணக்கை மட்டுமே பயன்படுத்துவதாகவும் ஐஸ்வர்யா லட்சுமி சுட்டிக்காட்டினார்.

“எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்தால் கூட நான் இனி சமூக ஊடகப் பக்கம் வரமாட்டேன்,” என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

விலகி நிற்கும் பிற நடிகைகள்

அதேபோல, தென்னிந்தியத் திரையுலகில் பரபரப்பாக நடித்து வரும் மமிதா பைஜுவும் சமூக ஊடகங்களிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார்.

இனி தனது திரைப்படம், நடிப்பு தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தமது மக்கள் தொடர்புப் பிரிவே பகிர்ந்து கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘பாரடைஸ்’ உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் நடிகை கயாடு லோஹரும் மன அமைதிக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முன்னுரிமை அளித்துச் சமூக ஊடகங்களிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.

திரைப்பயணத்திற்குச் சமூக ஊடகங்கள் முக்கியம் என்றபோதிலும், மனநலனைக் காக்க நடிகைகள் எடுத்துள்ள இந்த முடிவு திரையுலகினர் மத்தியில் தற்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்