மூத்த இந்தி நடிகர் அனுபம் கெர் மும்பையில் நடத்தி வரும் நடிப்புப் பள்ளியில் பயிற்சி பெற்றவர் சிருஷ்டி டாங்கே. பின்னர் ‘யுத்தம் செய்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
தமிழில் ‘மேகா’, தர்மதுரை’, ‘கத்துகுட்டி’ என்று பல நல்ல படங்களில் இவரைப் பார்க்க முடிந்தது. சிருஷ்டி டாங்கேயின் தாய் மொழி மராட்டி என்றாலும் மிகுந்த ஆர்வத்தின் பேரில் தமிழும் கற்றுக் கொண்டார்.
கணிசமான இடைவெளிக்குப் பிறகு ‘மகா சேனா’ படம் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் சிருஷ்டி.
ஏன் இந்த இடைவெளி? என்று யாரேனும் கேட்டால் சிரித்துக் கொண்டே, “போதுமான பட வாய்ப்பு இல்லையா என்று நேரடியாக கேட்கலாமே, நான் கோபிக்க மாட்டேன்,” என்று சொல்கிறாராம்.
படங்களைத் தாராளமாக தேர்வு செய்வதாகவும், தேடி வரும் வாய்ப்புகள் அனைத்தையும் தாம் ஏற்பதில்லை என்றும் கூறுகிறார்.
“என்னுடைய முதல் படம் ‘யுத்தம் செய்’ முதல் இதுவரை நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே என்னைப் பார்த்து இருப்பீர்கள். தமிழ் மட்டுமல்ல எல்லா மொழியிலுமே இதுதான் என் கொள்கை. அதிலும் தமிழ் என்றால் என் கதாபாத்திரங்கள் குறித்தும் கவனமாக இருப்பேன்.
“ஏனோ தமிழ் மீது அப்படி ஒரு பிடிப்பு ஏற்பட்டு விட்டது. மும்பை என்னுடைய ஜென்ம பூமி என்றால் தமிழகம் என் கர்ம பூமி,” என்று அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் சிருஷ்டி டாங்கே.
இதுவரை நகரத்துப் பெண்ணாகத்தான் பல படங்களில் நடித்துள்ளாராம். முதன் முறையாக ‘மகா சேனா’ படத்தில் பழங்குடி இனப் பெண்ணாக நடித்துள்ளார்.
“பழங்குடி மக்களின் வாழ்க்கை என்பது நம்முடைய வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அதிலும் பழங்குடிப் பெண்ணாக நடிப்பது எளிதல்ல.
“அவர்களது வாழ்க்கை முறையை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். உண்மையைச் சொன்னால் பழங்குடிப் பெண்ணாக நடிக்க கடும் போராட்டமே நடத்த வேண்டி இருந்தது. உடல் மொழி, பழக்க வழக்கங்கள், பேச்சு என எதுவுமே எனக்குச் சரியாக வரவில்லை.
“படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாள்கள் மட்டுமே இருந்தபோது தான் என்னை ஒப்பந்தம் செய்தனர்.
சற்று அவகாசம் கிடைக்குமா என்று கேட்டபோது இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் ‘உங்கள் மீது நம்பிக்கை உள்ளது’ என்று கூறிவிட்டார்.
படப்பிடிப்பு முழுவதும் அவர் தான் என்னை உற்சாகப்படுத்தி கரை சேர்த்தார் என்று சொல்ல வேண்டும். படம் பார்த்த பலரும் என் நடிப்பைப் பாராட்டினர். அவை எல்லாம் இயக்குநருக்கு உரியவை,” என்கிறார் சிருஷ்டி டாங்கே.
பொதுவாக இவர் இதுவரை நடித்த படங்களுக்காக ஏதேனும் ஒருவகையில் மெனக்கெட்டுள்ளாராம்.
“அனைத்து விதமான கதாபாத்திரங்களும் ஏதோ ஒரு வகையில் நம் உழைப்பை கேட்கவே செய்யும். இதற்கு முன்பு ‘தர்மதுரை’, ‘கத்துகுட்டி’, ‘காலக்கூத்து’ ஆகிய படங்களுக்காக அதிகம் மெனக்கெட்டுள்ளேன். மேலும் உடல்மொழி, வட்டார மொழி என கதாபாத்திரத்துக்காக நிறைய மாற வேண்டி இருக்கும்.
ஒரு நடிகையாக இயக்குநர் அளிக்கும் கதாபாத்திரத்தை சவாலாக ஏற்று நடிப்பதே என் வேலை. இதில் தெளிவாக இருக்கிறேன்,” என்று கூறியுள்ள சிருஷ்டி டாங்கேவுக்கு நகைச்சுவை படங்கள்தான் ரொம்பப் பிடிக்குமாம்.
குறிப்பாக, நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ படம் மிகவும் பிடித்தமானது என்கிறார்.
நடிகர் ஃபகத் ஃபாசில், துல்கர் சல்மான் ஆகியோருடன் நடிக்க வேண்டும் என்பது சிருஷ்டியின் ஆசைகளில் முக்கியமானது என்கிறார். தனது சினிமா பயணம் இப்போதுதான் தொடங்கி உள்ளதாகவும் திரையுலகில் நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டியிருப்பதை உணர்ந்திருப்பதால் நல்ல வாய்ப்புகளுக்காகப் பொறுமையுடன் காத்திருக்கப் போவதாகவும் சொல்கிறார்.

