திரையுலகில் தனித் தடம் பதிக்கும் அதிதி ஷங்கர்

திரையுலகில் தனித் தடம் பதிக்கும் அதிதி ஷங்கர்

3 mins read
8dc70aef-7fb3-4531-ab48-55c9ba27013c
அதிதி சங்கர். - படம்: ஸ்டூடியோ கிளிக்ஸ்
Google News Preferred Icon

தன் வளர்ச்சிக்கு தனது தாய்தான் மிகப்பெரிய தூண் என்றும் அமெரிக்காவில் இருக்கும் அக்கா ஐஸ்வர்யா தனக்கான முக்கிய ஊக்கம் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் நடிகை அதிதி சங்கர்.

தம்பி அர்ஜித் திரைப்படத் தயாரிப்புப் படிப்பை முடித்துவிட்டு தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ள நிலையிலும், வீட்டில் சினிமா பற்றிப் பேசிக்கொள்வதில்லை என்கிறார் இந்த இளம் நாயகி.

தந்தை சங்கர் இயக்கும் ‘வேள்பாரி’ படத்தின் அண்மைத் தகவல் குறித்து கேட்டால், “அப்பாதான் பதில் சொல்ல வேண்டும்,” எனச் சிரிப்புடன் கடந்துவிடும் அதிதி, தன் உழைப்பையும் திறமையையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு தமிழ்ச் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திரமாகப் பிரகாசித்து வருவதாகப் பலரும் பாராட்டுகிறார்கள்.

தமிழ்ச் சினிமாவில் நட்சத்திர வாரிசுகளின் அறிமுகம் எப்போதும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும். ஆனால், அந்த பிம்பத்தையும் தாண்டி, தன் சொந்தத் திறமையாலும் இயல்பான சுட்டித்தனத்தாலும் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனத்தைக் கவர்ந்தவர் நடிகை அதிதி ஷங்கர்.

அறிவியல் மீது கொண்ட ஈர்ப்பால் மருத்துவப் படிப்பை (எம்பிபிஎஸ்) நிறைவு செய்தார். இருப்பினும், கலைத்துறையின் மீது இருந்த அளப்பரிய காதலால், பெற்றோராய் அமையப்பெற்ற சங்கர்-ஈஸ்வரி தம்பதியிடம் இரண்டு ஆண்டுகள் அவகாசம் கேட்டு சினிமா உலகிற்குள் நுழைந்தார்.

‘விருமன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாகக் களமிறங்கிய இவர், முதல் படத்திலேயே தனது துடிப்பான நடிப்பாலும், ‘மதுர வீரன்’ பாடல் மூலமாக பாடகியாகவும் முத்திரைப் பதித்தார்.

அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ‘மாவீரன்’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது.

“தற்போது அர்ஜுன் தாசுடன் இணைந்து நான் நடித்திருக்கும் ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம் திரைக்கு வரத் தயாராக உள்ளது. விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், ஹேசம் அப்துல் வஹாப் இசையில், நான் பாடியுள்ள ‘கண்ணம்மா’ பாடல் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு, திருமண நிகழ்ச்சிகள் வரை கொண்டாட்டப் பாடலாக மாறியுள்ளது,” என்று அண்மைய மகிழ்ச்சியைப் பகிர்கிறார் அதிதி.

வந்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக்கொள்ளாமல், கதைகளை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுப்பதாகக் குறிப்பிடுபவர், நிறைய படங்களில் நடிப்பதைவிட நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகச் சொல்கிறார்.

“தற்போது ‘பைரவம்’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் கால்பதித்துள்ளேன். அடுத்து தமிழ் சினிமாவில் கதையின் நாயகியாகக் களம் காண்கிறேன். ‘ஈரம்’ அறிவழகன் இயக்கத்திலும், ‘96’ படத் தயாரிப்பாளர் நந்தகோபால் தயாரிப்பிலும் உருவாகும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இரண்டு பெரிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன்,” என்று கூறும் அதிதி, நடிப்புடன் நின்றுவிடாமல், பின்னணிப் பாடகியாகவும் அசத்தி வருகிறார்.

‘தாய் கிழவி’ திரைப்படத்தில் நிவாஸ் கே.பிரசன்னா இசையில் இவர் பாடிய ‘ஆறடி காத்திருக்கு’ பாடல் பலரின் மனத்தை நெகிழ வைத்தது.

தொடர்ந்து புதிய இசைத் தொகுப்புகள், ‘டியர் சிஸ்டர்ஸ்’ போன்ற படங்களில் பாடிவரும் இவர், ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், ஜி.வி.பிரகாஷ் ஆகிய முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடும் வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளார்.

சவாலான, அடிதடியும் விளையாட்டும் சார்ந்த கதைகளில் நடிக்க வேண்டும் என்பதே அதிதியின் தற்போதைய விருப்பமாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்
நடிகைஅதிதிபெற்றோர்திரைப்படம்வாரிசுமருத்துவம்மருத்துவர்