தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்பணம்: முரண்டு பிடிக்கும் முன்னணி நாயகர்கள்

4 mins read
3b9189ec-86ef-42b4-9998-642f88cd62c6
தனுஷ். - படம்: ஊடகம்
multi-img1 of 5

ஆண்டாண்டு காலமாக நீடித்து வரும் விவகாரம் இது.

முன்னணி நடிகர்கள், ஒரு படம் தோல்வி அடைந்தாலும்கூட, அடுத்த படத்துக்கு ஊதியத்தை உயர்த்திவிடுகிறார்கள். ஒருவேளை படம் வெற்றி அடைந்துவிட்டால், அவர்கள் கேட்கும் சம்பளம் மயக்கத்தைத்தான் வரவழைக்கும்.

தயாரிப்பாளர் சங்கம் பலமுறை ஊதியத்தைக் குறைக்கச் சொல்லி வலியுறுத்தியபோதும், நம் நாயகர்கள் இறங்கி வந்தபாடில்லை.

ஒருபக்கம் நடிகர்களின் சம்பளமும் மற்றொரு பக்கம் தயாரிப்பாளரின் கடன் சுமையும் தொடர்ந்து அதிகரித்து வருவதுதான் கோலிவுட்டின் உண்மை நிலவரம்.

பல தயாரிப்பாளர்கள் ஒன்றிரண்டு தோல்விப் படங்களைக் கொடுத்த காரணத்தால் நடுத்தெருவுக்கு வந்துவிட்ட சம்பவங்களைக் கோடம்பாக்கத்தில் சர்வ சாதாரணமாகக் கேட்க முடியும்.

சொந்த வீடு, கார், நிலபுலன்கள் என அனைத்தையும் விற்க வேண்டிய நெருக்கடி. அப்படியே விற்றாலும் மூச்சு முட்டும் அளவுக்குப் பின்தொடரும் கூடுதல் பிரச்சினைகள் என அவர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

‘ஐ டோன்ட் கேர்’ மனோபாவத்தில்தான் பெரும்பாலான நடிகர்கள் உள்ளனர். அதனால்தான் விஜய் சேதுபதி, விக்ரம், ரஜினி போன்ற சிலர் மட்டும் தயாரிப்பாளர்களை நஷ்டத்தில் இருந்து மீட்க, மீதமுள்ள சம்பளத்தை விட்டுக்கொடுப்பது, ஒருவேளை முன்பே முழுத் தொகையை வாங்கியிருந்தால் அதைத் திருப்பிக் கொடுப்பது என்று உதவி செய்கிறார்கள்.

இதன் காரணமாகவே, சில தயாரிப்பாளர்கள் சில நடிகர்களைத் தெய்வத்துடன் ஒப்பிடுகிறார்கள்.

புது தயாரிப்பாளர், புது வழக்கு

நடிகர் ரவிமோகனை வைத்து படங்கள் தயாரிக்க, ரூ.6 கோடி முன்பணம் கொடுத்திருந்தது பிடிஜி யுனிவர்சல் என்ற நிறுவனம். ஆனால், அந்நிறுவனத்தால் படம் தயாரிக்க முடியாமல் போக, கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டார்களாம்.

இங்குதான் ஒரு ‘டுவிஸ்ட்’. முன்பணத்தைத் திருப்பித் தராததுடன், தமக்கு இழப்பீடாக ரூ.9 கோடி தரவேண்டும் என வழக்கு தொடுத்துவிட்டார் ரவிமோகன்.

அதை விசாரித்த நீதிபதி, ரவிமோகன் தரப்பிடம், “பேசாமல் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடலாமே. இல்லாவிட்டால் உங்கள் நற்பெயர் கெட்டுவிடாதா? உங்களைப் பற்றி எதிர்மறை கருத்தைத்தானே ஏற்படுத்தும்,” என்று கேட்டார்.

இதையடுத்து, மத்தியஸ்தர் ஒருவரை நியமிக்க உள்ளதாகத் தெரிவித்தது நீதிமன்றம். மேலும், ரூ.9 கோடிக்கான உத்தரவாதத்தைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இது ரவிமோகனுக்குப் பின்னடைவு எனக் கூறப்படுகிறது.

சிம்பு வழியில் தனுஷ்

திரையுலகில் வம்பு என்றால் சிம்பு எனக் குறிப்பிடுவது குறைந்து, இப்போது அந்த இடத்துக்குத் தனுஷ் வந்துவிட்டார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த, ரஜினி வசிக்கும் போயஸ் தோட்டத்தில், ரூ.125 கோடி செலவில் வீடு கட்டியுள்ளார் தனுஷ்.

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன், தேனாண்டாள் மூவிஸ் முரளி ஆகிய இருவரின் படங்களில் நடிப்பதாகக் கூறி, பெருந்தொகையைப் பெற்றாராம் தனுஷ்.

ஆனால், படம் தயாரிக்க கால்ஷீட் கொடுக்காமல் அவர் இழுத்தடித்ததாகவும் முன்பணத்தைத் திருப்பிக் கேட்டபோது மறுத்து வருவதாகவும் தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால் தனுஷ் தரப்போ, குறித்த நேரத்தில் படப்பிடிப்பைத் தொடங்காதது தயாரிப்பாளர்களின் தவறு என்று சுட்டிக்காட்டியது. பஞ்சாயத்து இன்னும் முடிவுக்கு வரவில்லை என்கிறார்கள்.

புது மாப்பிள்ளைக்குச் சிக்கல்

இப்படித்தான் நடிகர் விஷால் பிரபல லைக்கா தயாரிப்பு நிறுவனத்துடன் மோதிக்கொண்டார்.

அந்த நிறுவனம் முன்பணமாக கொடுத்த தொகையை அவர் திருப்பிக்கொடுக்க மறுத்துவிட, விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தீர்ப்பு வந்துள்ளது. வாங்கிய பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.

நண்பரைக் கவிழ்த்த கதாநாயகன்

இந்தக் கட்டுரை எழுதும்போது எனது நெருங்கிய நண்பரின் நினைவு வந்தது.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அவருக்கு ஒரு திரை நாயகனின் நட்பு கிடைத்தது. நாளடைவில், நடிகருக்கு செய்தித் தொடர்பாளராகவும் பின்னாளில் மேலாளராகவும் மாறினார்.

இந்நிலையில், நண்பரைச் சுற்றியிருந்த சிலர், ‘நீங்களே அந்த நடிகரை வைத்து படம் தயாரிக்கலாமே’ என உசுப்பிவிட, நண்பரும் யோசிக்க ஆரம்பித்தார்.

நேரம் கூடிவர, அந்த நடிகர் கால்ஷீட் தந்ததுடன், என் நண்பர்தான் தயாரிப்பாளர் என்றும் வெளிப்படையாக அறிவித்தார். அதுவரை ஒளிமயமாக இருந்த நண்பரின் வாழ்க்கை, கேள்விக்குறியாக மாறியது.

படத்தைத் தொடங்கிய நாள் முதல் பல்வேறு பிரச்சினைகள். முதலில் இயக்குநர் ஓர் ஆட்டம் ஆடினார். அடுத்து, வெளிநாட்டில் பாடல் காட்சி எடுக்க வேண்டும் எனத் திட்டமிட்டபோது, கதாநாயகி வர மறுத்தார். (எனினும், அவர் மீது எந்தத் தவறும் இல்லை).

ஆனாலும், சிறிதோ பெரிதோ பிரச்சினை என்பதே குடைச்சல்தானே. நண்பருக்கும் அந்த நிலைதான்.

அப்படம் முடிவடைந்து, முதல் காட்சியைத் திரையிட்டுப் பார்த்தபோது நண்பருக்கு கடும் அதிர்ச்சி. இயக்குநர் தூக்கத்திலேயே படத்தை எடுத்தாரா என்பது தெரியவில்லை. ஆனால், நண்பருக்குத்தான் தூக்கம் கெட்டு துக்கம் ஆட்கொண்டது.

இறுதியில், எந்த நாயகனை நம்பி படம் எடுத்தாரோ, அவர் தன் சந்தை மதிப்புக்கும் அதிகமாக சம்பளம் கேட்டதுடன், அதைக் கொடுத்தால்தான் படத்தை வெளியிட அனுமதிப்பேன் என்று திடீர்ப் போர்க்கொடி உயர்த்தினார்.

நல்ல வேளை, நண்பர் சற்று பக்குவமானவர். அதிக ஆசையும் இல்லாதவர்.

சித்தன் போக்கு, சிவன் போக்கு என்ற ரீதியில் தனது சொந்த வீடு உள்ளிட்ட, கடும் உழைப்பில் வாங்கிய கார், நகை என அனைத்தையும் விற்று முடிந்தவரை அனைவருக்கும் பணத்தை ‘செட்டில்’ செய்தார்.

எதிர்பார்த்தது போலவே படம் செம மொக்கை.

‘வின்னர்’ படத்தால் தோல்வி

பிரசாந்த் நடித்த ‘வின்னர்’ படத்தில் இடம்பெற்றுள்ள நகைச்சுவைக் காட்சிகள் எல்லோரையுமே வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும்.

பல ஆண்டுகள் ஆன பின்னரும் அந்த நகைச்சுவைக்கு ஈடு இல்லை என்று இன்னமும்கூட ரசிகர்கள் மத்தியில் பேச்சு உள்ளது.

ஆனால், படத்தின் வசூல் அதன் தயாரிப்பாளரை, என் நண்பரைக் காட்டிலும் அதிகம் பாதித்தது.

சொந்த ஊரில் இருந்த சொத்துகளை விற்றுவிட்டு, சென்னைக்கு வந்து வாடகை வீட்டில் வசித்து வருகிறாராம். ஒரு பேட்டியில் அவர் இப்படிச் சொன்னார்:

“ஒரு காலத்தில் என் வீட்டில் இல்லாத பொருளே இல்லை. ஆனால், நொடித்துப் போன பின், ஒரு ‘டிவி’ வாங்க சிரமப்பட்டேன். வீட்டில் குடும்பமாக அமர்ந்து டிவி பார்க்கும்போது, பக்கத்து, எதிர் வீடுகளில் அனைவரும் சிரித்துக் கொண்டிருப்பார்கள். என்னவென்று பார்த்தால், ‘வின்னர்’ படக் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும். அடுத்த சில நிமிடங்களுக்கு, ஒருபக்கம் சிரிப்பொலி பெரிதாகக் கேட்க, எங்கள் வீட்டில் மட்டும் கண்ணீரும் கம்பலையுமாக இருப்போம்.”

குறிப்புச் சொற்கள்