கடந்த ஆண்டு தன் மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்தை அறிவித்த ரவி மோகன், பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் தொடர்பில் இருப்பதாகத் தகவல் பரவி வருகிறது. ஆனால் தனக்கும் கெனிஷாவுக்கும் எந்தவொரு உறவும் இல்லை என்று ரவி மோகன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு ரவி மோகன், கெனிஷா இருவரும் கைகோர்த்தபடி ஜோடியாக வந்தனர்.
அதைப் பார்த்த ரசிகர்களும் வலைத்தளவாசிகளும் ‘ரவி மோகன் சொன்னது பொய்யா?’ எனக் கேட்டுப் பதிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து ரவி மோகன் குறித்து உணர்வுபூர்வமான அறிக்கை ஒன்றை ஆர்த்தி வெளியிட்டார்.
இந்நிலையில், தற்போது கெனிஷா அளித்துள்ள பேட்டி பரவி வருகிறது.
“நான் எனது துணைவரை (சோல்மேட்) கண்டுகொண்டேன். எனக்கு இரு துணைவர்கள் உள்ளனர்.
“அவர்களில் ஒருவர், பெண். எங்களுக்கிடையே நிறைய புரிதல்கள் இருக்கின்றன. சண்டை வராது. இன்னொருவர் எனது கண்களைத் திறந்திருக்கிறார். பாதுகாப்பு, அக்கறை உள்பட அத்தனையும் அவரிடம் இருக்கிறது. என்னைச் சிரமப்படுத்தாமல் என்னிடம் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கிறார்.
“நான் சிறிது குழந்தைத்தனமான உள்ளம் கொண்ட பெண். எப்போது நான் இறப்பேன் என்றுகூட எனக்குத் தெரியாது. இருக்கும்வரை வாழ்க்கையை மகிழ்ச்சியாக ரசித்து வாழ வேண்டும் என்பது என் எண்ணம்.
தொடர்புடைய செய்திகள்
“யாருக்கும் கெடுதல் செய்யமாட்டேன். என்னைப் பற்றி எதிர்மறை கருத்துகளைக் கூறுவது என்பது என் பிரச்சினை அல்ல. உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாததால் அந்தப் பழியை என்மீது சுமத்துகிறீர்கள்.
“நமது மனநலனை நாம்தான் பார்த்துக்கொள்ளவேண்டும். அடுத்தவரிடம் கொடுத்தால் வீணாகிவிடும்,” என்று கெனிஷா கூறியுள்ளார்.