25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்த் திரையுலகில் சங்கீதா

2 mins read
e3b7b68e-8e21-4e0e-8a5d-9826354eb5e5
நடிகை சங்கீதா மாதவன் நாயர் (வலது). - படம்: இன்ஸ்டகிராம்

‘பூவே உனக்காக’ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கிய சங்கீதா, தற்போது 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழித் திரைப்படங்களிலும் நடித்தார்.

‘ரத்தத்தின் ரத்தமே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான சங்கீதா, அதனைத் தொடர்ந்து ‘எல்லாமே என் ராசாதான்’, ‘சீதனம்’, ‘அம்மன் கோயில் வாசலிலே’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தார்.

கடந்த 1996ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பூவே உனக்காக’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அப்படத்தின் ஒளிப்பதிவாளர் சரவணனைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட சங்கீதா, திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு சற்று ஓய்வு கொடுத்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ‘நகர வருதி நடுவில் நியான்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்த அவர், அதன் பிறகு ‘பராக்கிரமம்’, ‘ஆனந்த ஸ்ரீபாலா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

‘எதிரும் புதிரும்’ படத்துக்குப் பிறகு, 25 ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கிறார்.

‘காளிதாஸ் - 2’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த் திரையுலகில் வலம் வரவுள்ளார் சங்கீதா.

2019ஆம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. ‘ஸ்கை பிக்சர்ஸ்’ தயாரிக்கும் அப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். பரத், பவானி ஸ்ரீ, அபர்ணதி உள்ளிட்டோர் அதில் நடிக்கின்றனர்.

அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சங்கீதா நடித்துள்ளார். அண்மையில் வெளியான அப்படத்தின் ‘டீசர்’ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்