சுசீந்திரன் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘2k லவ் ஸ்டோரி’ படத்தில் நடித்துள்ளார் இளம் நாயகி மீனாட்சி கோவிந்தராஜன்.
ஏற்கெனவே ‘கென்னடி கிளப்’, ‘கோப்ரா’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களைக் கவனிக்க வைத்தவர்.
சுசீந்திரன் இயக்கத்தில் நடிப்பது எப்போதுமே இனிமையான அனுபவங்களைத் தரும் என்கிறார் இவர்.
“இதுவரை அவருடன் மூன்று படங்களில் பணியாற்றி உள்ளேன். ‘2k லவ் ஸ்டோரி’ மூன்றாவது படம். பெரிய அளவில் தத்துவங்கள் ஏதும் சொல்லாமல் மனதை லேசாக வைத்துக்கொள்ள உதவும் அழகான படம் இது என பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
“நானும் ஒரு ‘2k’ காலத்து இளம்பெண் என்பதால் இந்தக்கதையை சுலபமாகப் புரிந்துகொண்டு என்னை எளிதில் பொருத்திக்கொள்ள முடிந்தது. சுசீந்திரனைப் பொறுத்தவரை கதைக்கு என்ன வேண்டுமோ அதை அவரே நடித்துக்காட்டுவார்.
“அதனால் புதுமுகங்கள்கூட அவருடன் மிக எளிதில் இணைந்து பணியாற்ற முடியும்,” என்று சொல்லும் மீனாட்சி, இந்தப் படத்துக்காக தன்னை எந்த வகையிலும் தயார்ப்படுத்திக் கொள்ளவில்லையாம்.
இயக்குநர் சொன்னதை மட்டுமே பின்பற்றியதால்தான் எதிர்பார்த்ததைவிட அதிக பாராட்டுகள் கிடைத்ததாகச் சொல்கிறார்.
“ஒவ்வொரு படத்திலும் நான் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கும். இதுவரை பக்கத்து வீட்டுப்பெண் என்று சொல்லத்தக்க கதாபாத்திரங்களில்தான் நடித்துள்ளேன். ஆனால் இந்தப் புதுப்படத்தில் இதுவரை செய்யாத பாத்திரம் அமைந்தது. இயல்பாக நடிக்க சுசீந்திரன் நல்ல அறிவுரைகள் கூறி வழிநடத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
“எனது திரைப்பயணம் ‘கென்னடி கிளப்’ படத்தின் மூலம்தான் தொடங்கியது. அப்போது சினிமா குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அந்தப் படத்தில் நான் மட்டுமல்லாமல் 12 உண்மையான கபடி வீரர்களும் நடித்திருந்தனர்.
“எல்லாருமே சினிமாவுக்குப் புதிதானவர்கள். ஆனால், அனைவரையும் கதைக்கு ஏற்றதுபோல் பயிற்சி கொடுத்து சிறப்பாக நடிக்க வைத்த பெருமை சுசீந்திரனுக்குத்தான் போய்ச் சேரும்,” என்று சொல்லும் மீனாட்சி, ‘கோப்ரா’ படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தது தன் வாழ்நாளின் ஆகச் சிறந்த அனுபவம் என்கிறார்.
விக்ரம் தன்னை இருமடங்கு வியப்பில் ஆழ்த்தியதாகச் சொல்கிறார்.
விக்ரமைப் பொறுத்தவரை வெளியே மட்டுமல்ல, திரைத்துறையிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதைக் கண்கூடாகப் பார்த்ததாகவும் கூறுகிறார்.
“எவ்வளவு கடினமான காட்சியாக இருந்தாலும், அதை எவ்வாறு எளிமையான நடிப்பின் மூலம் கடந்து செல்ல முடியும் என்பதில்தான் அவரது முழுக் கவனமும் இருக்கும்.
“பல விருதுகளைப் பெற்றவர், பல வெற்றிப் படங்களில் நடித்தவர் என்பதற்கான எந்தவிதமான அடையாளமும் இல்லாமல் அனைவரிடமும் மிக எளிமையாகப் பேசிப் பழகுவார்,” என்று பாராட்டும் மீனாட்சி, இதுவரை ஏழு படங்களில் நாயகியாக நடித்து முடித்துள்ளாராம்.
இதுவரை தமிழில் அதிக கவனம் செலுத்தி வந்தவர், இனி பிற மொழிப் படங்களிலும் எளிதில் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்.
மீனாட்சி அடிப்படையில் ஒரு பரதநாட்டியக் கலைஞர். கடந்த 15 ஆண்டுகளாக நடனம்தான் இவருக்கான அடையாளமாக இருந்துள்ளது.
“சினிமா, நடிப்பு என்பது என் வாழ்க்கையில் சற்றும் யோசித்துப் பார்த்திராத விஷயம். நான் வேறொரு படத்தின் நடிப்புத் தேர்வுக்காகச் சென்றிருந்தேன். அதைப்பார்த்த இயக்குநர் சுசீந்திரன் ‘கென்னடி கிளப்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
“அறிமுகப் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்து தேடி வந்த வாய்ப்புகளை ஒப்புக்கொண்டேன். அது மட்டுமல்ல; சிறந்த இயக்குநர்களின் படங்களில் நடிப்பதால் நம்மால் நடனத்தில் இருந்து நடிப்புக்கு மாற முடியும் என்ற நம்பிக்கையும் மனதில் வலுத்தது.
என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?
“முன்பெல்லாம் ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் அமைவதைத் தவிர்க்க முடியாது. இப்போது நிலைமை மாறிவிட்டது. அடுத்து நடிகர் மஹத்துடன் ‘காதலே காதலே’ என்ற படத்திலும் இன்னொரு படத்திலும் நடித்துள்ளேன்.
“இரண்டிலுமே வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன. இப்படி நான் எதிர்பார்த்தது போன்ற பாத்திரங்கள் அமைந்தால் சுவாரசியமாக இருக்கும்.
“திரைத்துறைக்கு வந்த பிறகு என்னுடைய தனித்திறமைகள் நன்கு வளர்ந்துள்ளன. இந்தத் துறை எனக்குப் பொறுமையைக் கற்றுக்கொடுத்துள்ளது. சினிமாவில் கதாநாயகியாக நடிப்பது மிக எளிதான வேலை என்று நினைத்ததுண்டு. ஆனால் நடிக்க வந்த பிறகுதான் என்னென்ன சிரமங்கள் உள்ளன என்பதை அறிய முடிகிறது.
“கனவு கதாபாத்திரம் என்று இதுவரை எதுவும் இல்லை. ஆனால் அஜித் படம் என்றால் சிறு வேடம் என்றாலும் ஒரே ஒரு காட்சிதான் என்றாலும், தயக்கமின்றி நடிக்க ஒப்புக்கொள்வேன்,” என்கிறார் மீனாட்சி கோவிந்தராஜன்.