பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த பெருவெற்றி; சசிகுமார் உற்சாகம்

2 mins read
bb53113e-e117-4c6a-b923-2323d79e04a0
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. - படம்: ஊடகம்

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு அப்படக் குழுவுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

இந்தப் படம் பல கோடிகளை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியான போதும், தனது சம்பளத்தை உயர்த்தப் போவதில்லை என படத்தின் நாயகன் சசிகுமார் கூறியுள்ளார்.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றி - நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய சசிகுமார், பல ஆண்டுகளுக்குப் பிறகு தமக்கு இப்படியோர் வெற்றி கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

“இதை எனது வெற்றியாகக் கருதவில்லை. சசிகுமார் வெற்றி பெற்றுவிட்டார், தயாரிப்பு நிறுவனம் சாதித்துவிட்டது என நினைக்காதீர்கள்.

“புது இயக்குநர்களுக்கும் தோல்வி அடைந்த இயக்குநர்களுக்கும் ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது இந்தப் படம்.

“ஒருவர் தோல்வி அடைந்தால், ‘ஆமாம், நான் தோல்வி அடைந்துவிட்டேன்’ என்று ஒப்புக்கொள்ள வேண்டும். நான் ஒவ்வொரு முறையும் தோல்வியை ஒப்புக்கொண்டேன்,” என்று வெளிப்படையாகப் பேசினார் சசிகுமார்.

இதுவரை தாம் நடித்த படங்களில், ‘சுந்தர பாண்டிய’னும் ‘குட்டிப்புலி’யும்தான் அதிக வசூல் கண்ட படங்கள் என்று குறிப்பிட்ட அவர், `டூரிஸ்ட் ஃபேமிலி’ அவ்விரு படங்களையும் விஞ்சிவிட்டது என்றார்.

“திரையரங்குக்குச் சென்று பார்த்தபோது நல்ல வரவேற்பு இருந்தது. நல்ல படைப்புகளைக் கொடுத்தால் மக்கள் குடும்பத்துடன் திரையரங்குக்கு வருவார்கள் என்பதை மீண்டும் உறுதி செய்துகொண்டேன்,” என்றார் சசிகுமார்.

முன்னதாகப் பேசிய படத்தின் நாயகி சிம்ரன், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தமக்கு தமிழில் அருமையான கதாபாத்திரம் அமைந்ததாகக் குறிப்பிட்டார்.

தாம் இந்தியாவில் இல்லாத காரணத்தால் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என வருத்தம் தெரிவித்தார்.

“இப்படத்தின் கதையைக் கேட்டபோதே நிச்சயம் வெற்றி பெறும் என்றுஇயக்குநர் அபியிடம் கூறினேன். இந்த வெற்றிப்படைப்பில் நானும் ஒரு பகுதியாக இருந்ததற்குப் பெருமைப்படுகிறேன்.

“முப்பது ஆண்டுகளாக திறைத்துறையில் இருக்கிறேன். ரசிகர்கள் இல்லையென்றால் இந்த வெற்றிக்கு வாய்ப்பே இல்லை. அதற்காக அனைவருக்கும் நன்றி,” என்றார் சிம்ரன்.

சசிகுமார் மிகவும் தன்னடக்கமான மனிதர் என்றும் இலங்கைத் தமிழில் எப்படி பேச வேண்டும் என சொல்லிக்கொடுத்தார் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்