மறைந்து கிடக்கும் உண்மைகளைச் சொல்வதில் தமக்கு அலாதி பிரியம் இருப்பதாகச் சொல்கிறார் கவிஞர் பா.விஜய்.
இவர் ஓர் இயக்குநராக தமிழ் ரசிகர்களுக்குப் படைக்கும் மூன்றாவது படம் ‘அகத்தியா’. இதற்கு முன்பு ‘ஸ்ட்ராபெரி’, ‘ஆருத்ரா’ ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது ஜீவா, அர்ஜுன் ஆகியோருடன் கூட்டணி அமைத்துள்ளார்.
“எழுத்து என்பது எனக்கு மிகவும் முக்கியமானது. இயக்குநர் ஆவது என் கனவு. என் கதையை ஓர் இயக்குநராக நானே கையில் எடுக்கும்போது திரையின் வழியே வெகு சனங்களை எளிதில் சென்றடைகிறேன்.
“நான் கவிதைப் புத்தகங்களை எழுதியதைவிட வரலாற்று ரீதியான பாதிப்புகளைக் கவிதையாக எழுதியதுதான் அதிகம். அதில் ‘உடைந்த நிலாக்கள்’ புத்தகம் மிக முக்கியமான ஒன்று. தொலைக்கப்பட்ட மனிதர்களின் வாழ்வியல், மறைக்கப்பட்ட வரலாற்றுச் சம்பவங்களைப் பேசிய புத்தகம் அது.
“மூன்று பாகங்கள் வெளியானதால் எனக்குள் அது அழுத்தமான பதிவை ஏற்படுத்தியது. மறைந்து கிடந்த கண்ணீரையோ, ரத்தத்தையோ தொட்டு கலை வடிவம் ஆக்கும் பயணம் எனக்குப் பிடித்திருந்தது. அப்படி யோசிக்கும் போதுதான் இப்போது இயக்கியிருக்கும் ‘அகத்தியா’ படத்துக்கான கதை தீப்பொறியாக வந்து மனதில் விழுந்தது,” என்கிறார் பா.விஜய்.
கடந்த 1940க்கும் இந்த 2025க்கும் இடையேயான ஒரு பயணமாக இந்தப் படம் இருக்குமாம். ஜீவாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். இது முழுநீள திகில், நகைச்சுவைப் படமாக உருவாகி உள்ளதாம்.
ஏற்கெனவே பேய்களுடன் சம்பந்தப்பட்ட கதைகள் தமிழில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. ‘அகத்தியா’வும் கற்பனை கலந்த ஒரு பேய்க் கதைதான். ஆனால், ஒரு சுவாரசியமான படத்துக்கான அனைத்து அம்சங்களும் கொண்ட சரியான கலவையாக இந்தப் படம் அமைந்துள்ளது. இதற்காக நீண்ட உழைப்பு தேவைப்பட்டதால், இரண்டு ஆண்டுகள் ஒரு குழுவாக பயணப்பட்டிருக்கிறோம்.
“படத்தின் தயாரிப்பாளர் வேல்ஸ் ஐசரி கணேசிடம் கதையைக் கூறியபோது, அதிக பொருள்செலவில் உருவாக்கினால் வியாபார எல்லைகள் விரிவடையும் என்று உற்சாகப்படுத்தி, கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு ஆலோசனையும் வழங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
“அவர் கொடுத்த உற்சாகத்தால் அழுத்தமான தொழில்நுட்பத்தில் மண் சார்ந்த கதையின் ஆழத்துடன் தொழில்நுட்ப ரீதியில் படம் உருவாகியுள்ளது,” என்கிறார் பா.விஜய்.
’என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில். ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’ என்ற எம்ஜிஆர் படத்தின் பாடல் வரிகள்தான் இப்படத்தின் கதைக்கருவாம்.
நாயகன் ஜீவாவின் கதாபாத்திரத்தின் பெயர்தான் ‘அகத்தியா’. ஏன் இந்த பெயர் வந்தது என்பது கதையின் போக்கில் விவரிக்கப்பட்டிருக்குமாம்.
கதைப்படி ஜீவாவும் ராஷி கண்ணாவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். பின்னர் காதலர்களாக மாறும் இருவருக்கும் ஒரே இலக்குதான் இருக்கும். அதை நோக்கிச் செல்லும்போது என்ன நடக்கிறது என்பதுதான் கதையாம். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ‘அகத்தியா’ வெளியாகிறது.
அர்ஜுன், சார்லி, நிழல்கள் ரவி, யோகி பாபு, வி.டி.வி.கணேஷ் என தேர்ந்த நடிகர்களும் உள்ளனர். பா.விஜய்யும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
“இந்தப் படத்தின் கதையை விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த் எனப் பலரிடம் சொன்னேன். அவர்களுக்கு கதை பிடித்திருந்தாலும், தேதிகள் இல்லாததால் இப்படத்திற்கு வர முடியவில்லை. அந்தச் சமயத்தில்தான் ஜீவாவைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அவர் மூலம் தயாரிப்பாளர் ஐசரி கணேசை அணுக முடிந்தது.
“ஜீவா நாயகன் என்பது முடிவானதும், இந்தியிலும் படம் வெளியாவதை மனதில் கொண்டு ராஷியை நாயகியாக ஒப்பந்தம் செய்தோம்.
“கதைப்படி, நடிகர் அர்ஜுன் பேராசிரியர் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரிடம் எனக்கு நல்ல நட்பு உண்டு. அவர் நடித்த பல படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளேன்.
“அவர் இயக்கும் படங்களில் பாடல் எழுத என்னையும் மறக்காமல் அழைப்பார். ஓர் இயக்குநராக அவரிடம் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது,” என்கிறார் பா.விஜய்.

