இயக்குநரும் பாடலாசிரியருமான கங்கை அமரன் எழுதியுள்ள ‘உயிரிணையே’ என்ற இசைத் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதை டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டெயின்மென்ட் சார்பில் கிளாடி ஜெரால்டு தயாரித்துள்ளார்.
சகோ கணேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சதா சுதர்சனம் இசை அமைத்துள்ள இந்தத் தொகுப்பின் பாடல்களை தவசீலிதன்ராஜ், பர்ஹான் நவாஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கங்கை அமரன், “முன்பெல்லாம் ஒரு பாடலைத் தொடரலையாகப் பாடுவோம். இப்போது ஒவ்வொரு வரியாகப் பாடுகிறோம். செயற்கை தொழில்நுட்பத்தைத் பயன்படுத்திப் பாடுகிறோம். அதற்கு நாம் எப்படி நம்மைப் பெருமைப்படுத்திக்கொள்வது, உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஏஐ தொழில்நுட்பம் நம்மைக் கெடுத்துக்கொண்டிருக்கிறது. அதை நம்பி வேலை செய்தால் பிற்காலத்தில் மூளை வேலை செய்யாது.
“ஒரு கருப்பொருளை ஏஐயிடம் கொடுத்து விட்டால், அதுவே பாட்டெழுதி விடுகிறது. இதில் எப்படி நம் பெயரைப் போட்டுக் கொள்வது. எதற்குச் சொல்கிறேன் என்றால் வருங்காலக் குழந்தைகள் தன்னால் சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், எழுதத் தெரிந்திருக்க வேண்டும். வருங்கால குழந்தைகள் தன்னிடம் இருக்கின்ற சுயத்தை வெளியில் கொண்டுவர வேண்டும் என்பது என் மனமார்ந்த ஆசை,” என்றார்.

