ஐஸ்வர்யா அற்புதமான நடனக் கலைஞர்: இயக்குநர் பிருந்தா

ஐஸ்வர்யா அற்புதமான நடனக் கலைஞர்: இயக்குநர் பிருந்தா

2 mins read
72d6ef0c-f5ff-4df9-b549-03243dfbcc44
ஐஸ்வர்யா ராயின் திரைப் பயணத்தை ‘இருவர்’ படம் மூலம் தொடங்கி வைத்தவர் இயக்குநர் மணிரத்னம். - படம்: எக்ஸ்/ஐஸ்வர்யா ராய்

அழகு, நடிப்பு, நடனம் என அனைத்துப் பிரிவிலும் முன்னணியில் இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய், பலதரப்பட்ட வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

ஐஸ்வர்யா ராயின் திரைப் பயணத்தை ‘இருவர்’ படத்தின் மூலம் தொடங்கி வைத்தவர் இயக்குநர் மணிரத்னம். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்தார் ஐஸ்வர்யா ராய்.

மணிரத்னம் தன்னுடைய திரைப்படங்களில், ஐஸ்வர்யாவின் நடிப்புத் திறனையும், அவரது உடல்மொழி வெளிப்பாடுகளையும் தொடர்ந்து முன்னிலைப்படுத்தினார்.

இந்த வெற்றிகரமான கூட்டணியின் பின்னணியில் இருந்து செயல்பட்டவர் நடன இயக்குநர் பிருந்தா.

அவர் அண்மையில் ஐஸ்வர்யா ராயுடன் பணியாற்றிய அனுபவங்களை ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.

‘குரு’ படத்தில் ஐஸ்வர்யாவுடன் பணியாற்றியது குறித்து பிருந்தா கூறுகையில், “ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் போன்ற நடிகர்களைப் பெறுவது ஒரு வரம். ஐஸ்வர்யாவின் நடனத்திற்கு நான் ஒரு பெரிய ரசிகை. ஏனென்றால் ‘இருவர்’ படத்தில் அவருக்கு நான்தான் முதல் நடன இயக்குநர்,” என்றார்.

“ஐஸ்வர்யா ஏற்கெனவே கதக் நடனம் பயின்றவர், அவருக்கு எல்லா நடன முறைகளும் தெரியும். அவர் மிகவும் அழகானவர். அர்ப்பணிப்புடன் செயல்படுவதால் எப்போதும் சிறந்ததையே வழங்குவார்,” என்றார் பிருந்தா.

“இருவர் படத்தில் ‘கண்ணைக் கட்டிக்கொள்ளாதே’ பாடலுக்கு நடனம் அமைத்தபோது அந்த ஓர் இசைத் துணுக்கிற்கு அவர் கொடுத்த முக பாவனைகள் அற்புதம். பாடல் படப்பிடிப்பின் போது, மணிரத்னம் அதிகாலை 5 மணிக்கே காட்சி வைத்திருந்தார். அதற்கு ஐஸ்வர்யா தமிழில், நகைச்சுவையாக ‘ஐயோ, ஐயோ, நான் செத்துவிடுவேன் போலிருக்கு. கடவுளே, என்னை இப்படிச் சித்திரவதை செய்கிறீர்களே’ என்று சொல்வார்,” என்று பிருந்தா நினைவுகூர்ந்தார்.

“ஐஸ்வர்யா ஓர் அற்புதமான நடனக் கலைஞர் என்பதை ‘கண்ணைக் கட்டிக்கொள்ளாதே’ பாடல் படமாக்கும்போது உணர்ந்தோம். மோகன்லால் உட்பட அங்கிருந்த அனைவருமே ஐஸ்வர்யாவை மட்டுமே பார்த்தோம். அந்தப் பாடல் மிகவும் சவாலானது, ஏனெனில் அதில் பலவிதமான நடன அசைவுகள் கலந்திருந்தன,” என்று குறிப்பிட்டார் பிருந்தா.

ஐஸ்வர்யா ராய் எந்த ஒரு நடனப் பாணியையும் மிக எளிதாகக் கற்றுக்கொள்ளக் கூடியவர்,” என்று பிருந்தா பாராட்டியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்