கொவிட்-19 தொடர்பில் சிகிச்சைப் பெற்றுவந்த திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனும் அவரது மகளும் வீடு திரும்பியுள்ளதாகச் செய்தி வெளிவந்துள்ளது.
இவர்கள் இருவருக்கும் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐஸ்வர்யாவின் கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சன் இன்று மாலை தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
தங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறிய அபிஷேக், தாமும் தமது தந்தையான நடிகர் அமிதாப் பச்சனும் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறினார்.
மும்பையின் நானாவதி மருத்துவமனையிலிருந்து 46 வயது ஐஸ்வரியா ராயும் அவரது எட்டு வயது மகளும் காரில் வெளிவருவதைக் காட்டும் படங்களை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஜூலை 11 ஆம் தேதியன்று அவர்களுக்கு கொவிட்-19 உறுதிசெய்யப்பட்டதாகச் செய்தி வெளிவந்தது.

