விதவிதமான தோற்றங்களில் காணப்படும் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
அவர் தற்போது நடித்துவரும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அவர் இப்படித்தான் தோற்றமளிப்பார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் மிக கம்பீரமாகவும் அழகாகவும் ஸ்டைலாகவும் தோற்றம் அளிப்பது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. முழுக்க வெள்ளைத் தாடியுடனும் தலைமுடியுடனும் அவர் புது புகைப்படங்களில் காட்சி தருகிறார்.
அவரது நடிப்பில் உருவாகும் ‘விடாமுயற்சி’ படத்திலும்கூட கிட்டத்தட்ட இதேபோன்ற ‘சால்ட் அண்ட் பெப்பர்’ தோற்றத்தில்தான் காட்சி அளிப்பாராம். ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது.
இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அஜித் குறித்து அதிகமான தகவல்கள் ஏதும் வெளியாகாததால் அவரது ரசிகர்கள் சோர்வடைந்து இருந்தனர்.
‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்கள் குறித்த புதுச் செய்திகளை வெளியிட வேண்டும், அஜித் கார் பந்தயங்களில் பங்கேற்பது, இருசக்கர வாகனங்களில் உலகப் பயணம் மேற்கொள்வது ஆகியவை குறித்து தங்களுக்கு அவ்வப்போது அறிவிக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் கோரிக்கையாக இருந்தது.
அவர்களுடைய ஏக்கத்தைப் புரிந்துகொண்ட அஜித்தும் கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து வருகிறார்.
‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரூ.270 கோடி செலவில் தயாராகி வருகிறது. ஆதிக் ரவிசந்திரன் இயக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
அஜித்தும் திரிஷாவும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். மேலும் பிரசன்னா, சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
இந்நிலையில், அஜித்துடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற தனது நீண்டநாள் கனவு தற்போது நிறைவேறி உள்ளதாக நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
அஜித்துடன் படப்பிடிப்பில் பங்கேற்று நடிப்பது பெரும் கனவைப்போல் இருந்தது என்றும் பலமுறை அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்த போதெல்லாம் அது நிறைவேறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
“பல ஆண்டுகளுக்கு முன்பு ‘மங்காத்தா’ படம் வெளியானபோது நானும் அதில் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அவ்வாறு ஏதும் நடக்கவில்லை.
“ஆனால் அஜித்தின் புதுப்படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியான போதெல்லாம் நானும் அதில் இடம்பெற்றுள்ளதாக அவரது ரசிகர்கள் தொடர்ந்து யூகச்செய்திகளை வெளியிட்டு வந்தனர்.
“எனக்கு வாழ்த்தும் தெரிவித்து வந்தனர். அவர்களின் அந்த யூகம் இப்போது நிறைவேறி உள்ளது. இதற்காக அஜித்துக்கு நன்றி.
“கடந்த சில நாள்களாக படப்பிடிப்பில் பங்கேற்றேன். அஜித்தைப்போல் அடக்கமான ஒரு நடிகரைப் பார்க்க இயலாது. அஜித்தின் ரசிகர்கள் கடவுளைப்போல் கொண்டாட அவரது எளிமைதான் காரணம்,” என்று சமூக ஊடகப்பதிவில் குறிப்பிட்டுள்ளார் பிரசன்னா.