நடிகர் அஜித் தமது நடிப்பையும் மீறி கார்ப் பந்தயங்களில் பங்கேற்று முன்னேறி வருகிறார். கடந்த ஓராண்டாக அவர் பல்வேறு அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
அவற்றில் முத்தாய்ப்பாபக துபாய் உள்ளிட்ட இடங்களில் நடந்த பந்தயங்களில் பங்கேற்று இரண்டாவது, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
தற்போது ஜெர்மனியில் நடக்கும் கார்ப் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார்.
அங்குள்ள ரசிகர்கள் அஜித்தைச் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அப்போது அவர்களிடம் பேசிய அஜித், “கார்ப் பந்தயத்தைப் பிரபலப்படுத்துங்க, என்னைப் பிரபலப்படுத்த வேண்டாம். இங்கு கார்ப் பந்தயத்தில் ஈடுபடும் இந்திய வீரர்களை முன்னிலைப்படுத்துங்கள். இங்குள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் உடல் ரீதியாக, மனரீதியாக சிரமப்படுகிறார்கள். அவர்களுடைய சிரமங்கள் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. நிச்சயம் ஒருநாள் இந்திய வீரர்களும் ‘ஃபார்முலா ஒன்’ கார்ப் பந்தயத்தில் சாம்பியன் ஆவார்கள்,” என்றார்.
அஜித்தின் இந்தப் பேச்சு ரசிகர்களிடையே பரவி வருகிறது.
இதற்கிடையே அஜித் நடிக்கும் 64வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போகிறார். இந்தத் தகவலை அவரே உறுதிப்படுத்தியிருந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் தற்போதைய நிலவரப்படி அஜித் குமார், கார்ப் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருவதால் இந்தப் படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே தற்போது அஜித்தின் 64வது படத்திலிருந்து ரோமியோ பிக்சர்ஸ் விலகிவிட்டதாகவும் அஜித் படத்தைத் தயாரிப்பதற்கு வேறொரு நிறுவனத்துடன் ஆதிக் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.