தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குழந்தையுடன் பயணம் செய்தவருக்கு அஜித் உதவிக்கரம்

2 mins read
3c711b64-75cc-4de6-8aee-e4c019447008
லண்டன் விமான நிலையத்தில் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பயணி. படம்: டுவிட்டர் -

தம் 10 மாதக் குழந்தையுடன் பயணம் செய்த பெண் ஒருவருக்கு லண்டன் விமான நிலையத்தில் நடிகர் அஜித் குமார் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

அந்தப் பயணி தனியாகப் பயணம் செய்ததை அறிந்து, அவரது பயணப்பையை விமானம் வரை தூக்கிச் சென்று உதவிய அஜித், பலரது நெஞ்சங்களையும் வென்றுள்ளார்.

அந்தப் பயணியின் கணவர், இதுகுறித்து சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விமான நிலையத்தில் அஜித்தை தம் மனைவி சந்தித்ததாகவும் அவரது தன்னடக்கம் தங்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளதாகவும் அந்தப் பெண்ணின் கணவர் குறிப்பிட்டார்.

"என் மனைவி கிளாஸ்கோவில் இருந்து சென்னைக்கு இன்று பயணம் செய்கிறார். எங்கள் 10 மாதக் குழந்தையுடன் அவர் தனியாகப் பயணம் செய்கிறார். லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் அஜித் குமாரை சந்திக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

"பயணப்பை, குழந்தை பையுடன் என் மனைவி பயணம் செய்தார். அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதித்து மட்டுமல்லாமல், என் மனைவி தனியாகப் பயணம் செய்ததை அறிந்து, அங்கிருந்து விமானம் வரை பயணப்பையைத் தூக்கிச்செல்ல அஜித் முன்வந்தார்," என்று அந்தப் பயணியின் கணவர் பதிவிட்டார்.

அதற்குப் பரவாயில்லை என்று அந்தப் பயணி கூறியதற்கு, "இருக்கட்டும், எனக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். எனவே, குழந்தையுடன் பயணம் செய்வதன் சிரமம் பற்றி எனக்குத் தெரியும்," என்று அஜித் சொன்னார்.

"எங்களது குழந்தைப் பையை விமானம் வரை தூக்கிச்சென்ற அஜித், அங்கு விமானச் சிப்பந்திகளிடம் ஒப்படைத்து என் மனைவியின் இருக்கைக்குப் பக்கத்தில் அது வைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்தார்.

"அஜித்துடன் பயணம் செய்த ஒருவர், தலைவா நீங்கள் எதற்கு, நான் எடுத்து வருகிறேன் என்று சென்னார். அதற்கும் பரவாயில்லை என்று அஜித் சொல்லிவிட்டார்.

"இவ்வளவு பெரிய நடிகர் ஒருவர், கனிவன்புடன் உதவியிருப்பது எங்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது," என்று அந்தப் பயணியின் கணவர் டுவிட்டரில் பதிவிட்டார்.