நடிகர் அஜித் கார் பந்தயத்தில் வெற்றி பெற்றார், நடிகர் அஜித் கார் விபத்தில் சிக்கினார் என்றுதான் தன்னைப்பற்றி ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த நிலை மாறி கார் பந்தய வீரர் அஜித் இன்று செய்தி வெளியாக வேண்டும் என்பதே அஜித்தின் ஆசையாம்.
திரையுலகமும் கார் பந்தயக்களமும் தனது இரு கண்கள் என்று அடிக்கடிச் சொல்வார் அஜித்.
தற்போது அவரது கார் பந்தய வாழ்க்கையை விவரிக்கும் ஆவணப்படம் உருவாகி வருகிறது. 90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படத்தை ஏஎல் விஜய் இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
கேட்பவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் இரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படம், வரும் மே மாதம் முதல் தேதியன்று வெளியாக இருக்கிறது.
தமிழில் உருவாகியுள்ள படம் என்றாலும், ‘அஜித்குமார் - லைஃப் ஆஃப் த கிளாடியேட்டர்ஸ் இன் த மோட்டார்’ என்று ஆங்கிலத்தில் தலைப்பு வைத்துள்ளனர்.
இதில் வழக்கமான சினிமாத்தனம் இருக்காது. இது விளையாட்டு வீரரின் உண்மையான உணர்வையும் எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கும் காட்சிகள் இருந்திருக்கும்.
பந்தயக் களத்தில் அஜித் கம்பீரமாக நிற்பதில் தொடங்கி, அவரது பந்தயக்கார் சீறிப் பாய்ந்து செல்வது வரை அனைத்துக் காட்சிகளும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
பெரும்பாலான காட்சிகள் நேரடியாகப் படமாக்கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பம்சம். திரையுலகம் தனக்கு எதிர்பாராத வெற்றியைக் கொடுத்து நினைத்துப் பார்க்காத உயரத்தில் அமர வைத்துள்ளது என்பதை நன்றியோடு நினைத்துப் பார்க்கும் அவர், தனது கார்பந்தயக் கனவும் கலைந்துபோகாமல் செயல்பட்டு வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
அதனால்தான் இந்த வயதிலும் 18 வயது இளையர்களைப் போல் தன் எடையைக் குறைத்து உடலைக் கட்டுக்கோப்பாக மாற்றியுள்ளார்.
கடினமான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு எனப் போராடி இன்று அனைத்துலக கார் பந்தயங்களில் வெற்றிகளைப் பெற்று வருகிறார்.
தன்னைவிட 20 அல்லது 30 வயது குறைவாக உள்ள இளையர்களுடன் அவர் போட்டியிட வேண்டியுள்ளது. ஆனாலும் அசராமல் தன்னம்பிக்கையுடன் களம்கண்டு வருகிறார் அஜித். இவற்றையெல்லாம் அந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர்.
இதன் வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

