பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்து, உடல்நலன், தனது அணியின் நலனைக் கருத்தில்கொண்டு, துபாய் கார் பந்தயப் போட்டியில் இருந்து விலகுவதாக நடிகர் அஜித் அறிவித்துள்ளார்.
எனினும், தனது ‘அஜித்குமார் ரேசிங் அணி’ இப்போட்டியில் பங்கேற்பதாகவும் தாம் அணியின் உரிமையாளராக நீடிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“தீவிர ஆலோசனைக்குப் பிறகு துபாய் போட்டியில் இருந்து அஜித் விலகுவது குறித்த கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு அவரது தனிப்பட்ட லட்சியங்களைக் கடந்து அணியின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் அவருக்குள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பை கோடிட்டுக் காட்டுகிறது.
“ஒரு வீரராக துபாய் போட்டியில் அவர் பங்கேற்க இருந்தார். இப்போது உரிமையாளராக மட்டும் போட்டியில் தொடர்வார்.
“அஜித்குமார் ரேசிங் சார்பில் இரு அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் கடினமான, தன்னலமற்ற முடிவை அஜித் எடுத்துள்ளார்,” என அவரது அணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.