‘விடாமுயற்சி’ படத்தின் வெளியீடு தாமதமானதில் தன் ரசிகர்களைவிட நடிகர் அஜித்தான் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம். இதற்கான காரணம் குறித்து தற்போது சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
பொங்கல் பண்டிகையின்போதுதான் படத்தை வெளியிட வேண்டும் என்பதில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவும் உறுதியாக இருந்ததாம்.
இப்படத்தின் பல்வேறு முக்கியமான காட்சிகளையும் பாடல்களையும் வெளிநாடுகளில் படமாக்கி உள்ளனர்.
பொதுவாக, தமிழகத்திலும் பல நாடுகளிலும் பண்டிகைக் காலங்களில் ஒரே நேரத்தில் படங்களை வெளியிடுவது என்றால் பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும்.
ஒரு படம் வெளியீடு காணும் நாடுகளில், வெளியீட்டுக்கு15 நாள்களுக்கு முன்பே உரிய தணிக்கைச் சான்றிதழ் பெறுவது அவசியம்.
மேலும் சில முக்கியமான ஆவணங்களைத் தயார் செய்து அளிக்க வேண்டியிருக்கும். இந்த விஷயத்தில் ‘விடாமுயற்சி’ படக்குழுவினர் கோட்டை விட்டுவிட்டனராம்.
வெளிநாட்டு நடைமுறைகளை முடிப்பதற்கு நிறைய கால அவகாசம் இருப்பதாக நினைத்த படக்குழுவினர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை மறந்துவிட்டனர்.
அதனால் வெளிநாடுகளில் உரிய ஆவணங்களை அளிப்பதிலும் தணிக்கைச் சான்றிதழைப் பெறுவதிலும் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், அவர் நடித்துள்ள மற்றொரு படமான ‘குட் பேட் அக்லி’ பொங்கலுக்கு வெளியாகும் என்று பரவிய தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என அஜித் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக இப்படத்தின் படப்பிடிப்பை நாள்தோறும் 14 மணி நேரம் நடத்தியுள்ளனர். அச்சமயம் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார் அஜித். எனினும் அதைப் பொருட்படுத்தாமல் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பிலும் பங்கேற்றாராம்.
அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், நடன அமைப்பாளர் கல்யாண் மாஸ்டரும்கூட, அஜித் கடும் காய்ச்சலுடன் படப்பிடிப்பில் பங்கேற்றதை உறுதி செய்தார்.
இவ்வளவு கடினமாக உழைத்தும்கூட ‘விடாமுயற்சி’ உரிய நேரத்தில் வெளியாகவில்லை என்பதில் அஜித்துக்கும் மிகுந்த வருத்தம்தான்.
அடுத்த மாதத்துக்குள் படத்தை வெளியிட வேண்டும் என்பதில் லைக்கா நிறுவனம் முனைப்பாக உள்ளது.
பொங்கல் நாளன்று படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பும் வெளியீட்டுத் தேதியும் வெளியாகக்கூடும்.
எனினும் ‘குட் பேட் அக்லி’ படம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பில்லை. அது திட்டமிட்டபடி ஏப்ரல் மாதம்தான் வெளியாகும் என்கிறார்கள் அஜித் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

