கார்ப் பந்தயங்களில் ஆர்வம் கொண்ட அஜித், தனக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவரின் உருவச் சிலையை பிரேசிலில் பார்த்ததும் உருகிப்போய் அவர் காலில் முத்தமிட்ட காணொளி ஊடகத்தில் பரவி வருகிறது.
அஜித் நடித்திருந்த இரண்டு படங்கள் தொடர்ந்து வெளியாயின. பலதரப்பட்ட விமர்சனங்களைப் பெற்றாலும் ‘குட் பேட் அக்லி’ நல்ல வசூலைப் பெற்றது.
இந்நிலையில் மீண்டும் கார்ப் பந்தயத்தில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார் அஜித்.
துபாய், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நடந்த கார்ப் பந்தயங்களில் தனது குழுவினருடன் கலந்துகொண்ட அவர் பரிசுகளையும் தட்டிச் சென்றார். இதனால் அவர் உச்சக்கட்ட உற்சாகத்தில் இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து, பிரேசிலில் நடக்கும் கார்ப் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காகத் தற்போது அவர் அங்கு சென்றிருக்கிறார். அங்கு தனது முன்மாதிரியும் பிரபல கார்ப் பந்தய வீரருமான அயர்ட்டன் சென்னாவின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தியதுடன் அவரது சிலைக்கு அஜித் முத்தமும் கொடுத்தார்.
அதுதொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. மொத்தம் மூன்று முறை ஃபார்முலா 1 கார்ப் பந்தயத்தில் முதலிடத்தைப் பிடித்த சென்னா பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். அவர், கடந்த 1994ஆம் ஆண்டு ஒரு கார்ப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.