இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, அண்மையில் 2025க்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. தமிழ்த் திரையுலகிற்கு முக்கியப் பங்காற்றியுள்ளதை அங்கீகரிக்கும் விதமாக, நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
தற்போது துபாயில் கார் பந்தயங்களில் அஜித் போட்டியிட்டு வருகிறார். ‘24எச் கார் ரேஸ்’ எனும் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்த அவரின் குழுவுக்குப் பரவலாக பாராட்டுகள் குவிந்துள்ளன. அக்டோபர் வரை கார் பந்தயங்களில் அஜித் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, அவர் முழுமூச்சுடன் நடிப்புப் பணிக்குத் திரும்புவார்.
அஜித்துக்கு பத்ம பூஷன் விருது பற்றிய அறிவிப்பும் பந்தய வெற்றி பற்றிய செய்திகளும் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, திரைத்துறையையும் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்தவர்களும் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வந்துள்ளனர்.
எனினும், அஜித்தின் நெருங்கிய நண்பரான நடிகர் விஜய், அவரைப் பாராட்டவில்லை என வதந்திகள் பரவின.
அவை குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் கேட்கப்பட்டதற்குப் பதிலளித்த அவர், “இந்த வதந்திகள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை. கார் பந்தய வெற்றி குறித்து அஜித்துக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தவர்களில் விஜய்யும் ஒருவர். அதேபோல, பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டபோது, விஜய் அவரை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்.
“இருவரும் உண்மையான, நெஞ்சார்ந்த நட்பைக் கொண்டுள்ளனர். எனவே, விஜய் வாழ்த்து கூறவில்லை என்ற வதந்தியில் உண்மை எதுவுமில்லை,” எனத் தெளிவுபடுத்தினார்.